இந்திய பெண்கள் அணி, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
இங்கிலாந்தில் நேற்று நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி, இங்கிலாந்து பெண்கள் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய பெண்கள் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஓரளவு நிதானமாக ஆடினாலும் சீரான இடைவெளியில் விக்கெட்களையம் இழந்து வந்தது. 50 ஓவர்கள் முடிவில், இங்கிலாந்து அணியால் 7 விக்கெட்கள் இழப்புக்கு 227 ரன்களே அடிக்க முடிந்தது.
அதிகபட்சமாக இங்கிலாந்து அணியில், அலைஸ் டேவிட்சன் ரிச்சர்ட்ஸ் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும், டேனியல் வியட் 43 ரன்களும், சோபி ஏசிலெஸ்டொன் 31 ரன்களும், சோபியா டன்க்லே 29 ரன்களும் அடித்தனர். கடைசியில் சார்லட் டீன் அதிரடியாக ஆடி 24 ரன்களை சேர்த்தார். இந்திய அணியின் தீப்தி சர்மா 2 விக்கெட்களும், ஜூலான் கோஸ்வாமி, மேக்னா சிங், ராஜேஸ்வரி கைக்வாட், ஸ்நே ராணா மற்றும் ஹர்லீன் தியோல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதன் பின் 228 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்கத்தில் ஷெபாலி வர்மா 1 ரன்னில் ஆட்டமிழந்தாலும், அதன் பிறகு இறங்கிய யாஷ்டிகா பாட்டியா, ஸ்மிருதி மந்தன்னா வுடன் சேர்ந்து இந்திய அணியின் ரன்களை உயர்த்தினார். யாஷ்டிகா பாட்டியா, 50 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
பின் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பொறுப்புடன் விளையாடி அணிய வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இறுதி வரை சிறப்பாக விளையாடிய மந்தன்னா 91 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்மன்ப்ரீத் கவுர் 74 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதனால் இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 45ஆவது ஒவரிலேயே சுலபமாக எட்டியது. இதன்படி இந்திய அணி, இங்கிலாந்து அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது. இங்கிலாந்து அணியில், கேட் கிராஸ் 2 விக்கெட்களும், சார்லட் டீன் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
3 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.