மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி! தீப்தி ஷர்மா படைத்த சாதனை!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி வென்றுள்ளது.
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய நிலையில், இரண்டு தொடரிலும் அசத்தலான வெற்றிபெற்று நாடு திரும்புகிறது. ஏற்கனவே, டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று 5 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் தொடரை கைப்பற்றி அசத்தியது.
டி20 தொடரில் வெற்றிபெற்றதை தொடர்ந்து, இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. அதில் முதல் போட்டியில் 211 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்திய அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இருப்பினும், கடைசியாக ஒரு போட்டி மீதமிருந்த நிலையில், அந்த போட்டி இன்று வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 38.5 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக குறைவான இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 28.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த 3-வது ஒரு நாள் தொடரில் வெற்றிபெறுவதற்கு முக்கியமான காரணமே திப்தி ஷர்மா பந்துவீச்சு தான் என்று சொல்லவேண்டும். ஏனென்றால், இந்த போட்டியில் அவர் மொத்தமாக 6 விக்கெட்களை வீழ்த்தினார். எனவே, அவருடைய அசத்தலான பந்துவீச்சில் தான் மேற்கிந்திய தீவுகள் அணி குறைவான ரன்களில் சுருண்டது.
திப்தி ஷர்மா சாதனை
இந்த போட்டியில் அவர் 6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் இரண்டு ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். அது மட்டுமின்றி, 2 முறை 6 விக்கெட் எடுத்த 2வது மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஆனார். முதலிடத்தில் தென்னாப்பிரிக்காவின் சுனே லூஸு உள்ளார். இதற்கு முன் திப்தி ஷர்மா கடந்த 2016-ல் இலங்கைக்கு எதிராக 6 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அதனை தொடர்ந்து 2024-ஆம் ஆண்டு 6 விக்கெட்களை வீழ்த்தி இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.