இந்திய மகளிர் அணி அதிர்ச்சித் தோல்வி! முதல் அணியாக அரை இறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலிய அணி!
இன்று நடைபெற்ற மகளிர் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வியடைந்ததால் அரை இறுதி வாய்ப்பு என்பது கேள்வி குறியாக இருக்கிறது.
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைப் போட்டியில் இன்று நடைபெற்ற 18-வது ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியும், ஆஸ்திரேலியா மகளிர் அணியும் ஷார்ஜா மைதானத்தில் மோதியது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி, களத்தில் பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலியா அணி தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. இருப்பினும் ஆஸ்திரேலிய தொடக்க வீராங்கனையான கிரேஸ் ஹாரிஸ் நிதானமாக விளையாடி 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு, ஜோடி சேர்ந்த அணியின் கேப்டனான தஹ்லியா மெக்ராத்தும், எல்லிஸ் பெர்ரியும் நிதானமாக விளையாடி அணிக்காக ரன்களை சேர்த்தனர்.
இருவரின் பொறுமையான விளையாட்டால் ஆஸ்திரேலிய அணி டீசென்ட்டான ஸ்கோரை இந்திய அணிக்கு செட் செய்தது. இறுதியில், 20 ஓவர் பேட்டிங் பிடித்த ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது. அதில், அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 40 ரன்களும்,தஹ்லியா மெக்ராத் மற்றும் எல்லிஸ் பெர்ரி 32 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக ரேணுகா சிங் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, 152 என்ற இலக்கை நோக்கி இந்திய மகளிர் அணி பேட்டிங் களமிறங்கியது. தொடக்கத்தில் களமிறங்கிய வீராங்கனையான ஷாபாலி வர்மா அதிரடியான விளையாட்டை வெளிப்படுத்தினார். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் 20 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து ஸ்மிருதி மந்தானாவும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் நட்சத்திர வீராங்கனையான ஜெமிமா 16 ரன்களில் ஆட்டமிருந்து வெளியேறினார். இதனால் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் அந்த நேரத்தில் அணியின் கேப்டனான ஹர்மன்ப்ரீத் பேட்டிங் களமிறங்கி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார். அவருடன் தீப்தி ஷர்மாவும் இணைந்து பொறுமையாக விளையாடினார்.
ஆனால், ரன்கள் அதிகம் தேவைப்பட்ட இந்திய அணிக்கு அது கை கொடுக்கவில்லை. இப்படி இருந்தும் அடுத்தடுத்து தொடர்ச்சியாக விக்கெட்டுகளையும் இழந்ததால் இந்திய அணியால் தனது இலக்கை எட்ட முடியவில்லை. இருப்பினும் ஒரு முனையில் ஹர்மன் பிரித் தனியாளாக இறுதி வரை போராடினார்.
இறுதியில், 20 ஓவர்கள் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஹர்மன் பிரித் 54 ரன்களும், தீப்தி சர்மா 29 ரன்களும் எடுத்திருந்தனர்.
ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக அனபெல் சுதர்லேண்ட் மற்றும் சோஃபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். மேலும் இந்தத் தொடரில் முதல் அணியாக ஆஸ்திரேலியா மகளிர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தோல்வியின் மூலம் இந்திய மகளிர் அணியின் அரை இறுதி வாய்ப்பு சற்று கேள்வி குறியாகவே இருக்கிறது. புள்ளிப்பட்டியலில் 2-ஆம் இடம் இருந்தாலும் அடுத்ததாக நடைபெறும் நியூஸிலாந்து-பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியின் முடிவு வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.