“இலங்கையை பந்தாடிய இந்திய மகளிர்அணி”அடித்து நொறுக்கி முன்னிலை..!!
இந்திய மகளிர் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டி தொடரில் 2-1 என்ற கணக்கில் வென்றது. டி-20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், மூன்றாவது டி-20 போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இலங்கை அணியின் யசோதா மெண்டிசும், சமன் அட்டப்பட்டும் களமிறங்கினர்.
யசோதா மெண்டிஸ் விரைவில் அவுட்டானார். இலங்கை அணியின் சமன் அட்டப்பட்டு 28 ரன்களும், சசிகலா ஸ்ரீவர்தனே 35 ரன்களும், நிகாஷி டி சில்வா 31 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.
இறுதியில், இலங்கை மகளிர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அருந்ததி ரெட்டி, ஹர்மன்பிரித் கவுர் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான மிதாலி ராஜ், ஸ்மிருதி மந்தனா ஆகியோர் விரைவில் அவுட்டாகினர்.
அடுத்து இறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 40 பந்துகளில் 2 சிக்சர், 6 பவுண்டரியுடன் 57 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில், இந்திய அணி 18.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இலங்கை அணி சார்பில் சமன் அட்டப்பட்டு 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. நான்காவது டி 20 போட்டி வரும் 24ம் தேதி நடைபெறுகிறது.
DINASUVADU