அதிரடி காட்டிய சிவம் துபே…இந்திய அணி அபார வெற்றி ..!
இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையே முதல் டி20 மொஹாலியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் அணியில் அதிக பட்சமாக முகம்மது நபி 2 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 27 பந்துகளில் 42 ரன்களை எடுத்தார். இந்தியா அணியில் அக்சர் படேல், முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டை எடுத்தனர்.
159 என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் , சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். நீண்ட இடைவேளைக்கு பிறகு ரோஹித் சர்மா டி20 போட்டியில் களமிறங்கினார். கிட்டத்தட்ட 14 மாதங்களுக்கு பிறகு இன்று தான் டி20 போட்டியில் விளையாடினர். அதனால் அவரது சிறப்பான ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக போகிறது என நினைத்த போதே இரண்டாவது பந்தில் ரன் ஓட முயற்சித்த போது சற்றும் எதிர்பாரத விதமாக ரன் அவுட் ஆகி ரன்கள் எதுவும் எடுக்காமல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
இதனால் பின்னர் களமிறங்கிய திலக் வர்மா களத்தில் நின்ற சுப்மன் கில் உடன் ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் நிதானத்துடன் திலக் வர்மாவும், மறுமுனையில் சிறப்பாக ஆடிய சுப்மன் கில்லும் சிறப்பானதொடக்கத்தை வெளிப்படுத்திய அந்த தருணத்தில் சுபன் கில் 23 ரன்களை எடுத்து பெவிலியன் திரும்பினார். அதன் பிறகு களமிறங்கிய சிவம் துபே, திலக் வர்மாவுடன் ஜோடி சேர்ந்தனர்.
இருவரும் சீரான இடை வெளியில் பௌண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசினர். இருவரின் கூட்டணியில் 44 ரன்களை எட்டிய போது 8.4 ஒவரில் திலக் வர்மா, அஸ்மத்துல்லாஹ்விடம் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அந்நிலையில் இந்திய அணி 72 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. பிறகு ஜோடி சேர்ந்த சிவம் துபேவும், ஜிதேஷ் சர்மாவும் பொறுப்புடன் விளையாடி தங்களது கூட்டணியில் 45 ரன்களை எடுத்து இருந்த நிலையில் ஜிதேஷ் சர்மா 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக இந்திய அணி 17.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. களத்தில் சிவம் துபே 60* ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.