INDvsENG : இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!
இந்தியா- இங்கிலாந்து இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் என்ற இந்திய அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 445 ரன்கள் எடுத்தன. இதில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்கள் குவித்தார். 126 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர்.
ரோஹித் சர்மா 19 ரன்களில் விக்கெட்டை இழக்க பின்னர் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் இருவரும் சிறப்பாக விளையாடினர். சதம் விளாசிய சிறிது நேரத்திலே காயம் காரணமாக ஜெய்ஸ்வால் வெளியேற அடுத்து வந்த ரஜத் படிதார் டக் அவுட் ஆனார். 5-வது விக்கெட்டுக்கு வந்த குல்தீப் யாதவ் 3 பவுண்டரி , 1 சிக்ஸர் உட்பட 27 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் விளையாடி வந்த சுப்மன் கில் சதம் அடிக்காமல் 91 ரன்களுடன் விக்கெட்டை பறிகொடுத்தார்.
மீண்டும் ஜெய்ஸ்வால் இரட்டை சதம்… இங்கிலாந்து அணிக்கு 557 ரன்கள் இலக்கு..!
இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தில் காயம் காரணமாக வெளியாகிய ஜெய்ஸ்வால் விளையாடினார். ஆட்டம் தொடங்கியது முதல் அதிரடிய விளையாடிய ஜெய்ஸ்வால் 231 பந்துகளில் 14 பவுண்டரி , 10 சிக்ஸர் உடன் 2-வது இரட்டை சதத்தை அடித்தார். மறுபுறம் விளையாடிய சர்பராஸ் கானும் அரைசதம் கடந்தார். பின்னர் இந்திய அணி 430 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளர் செய்தது.
களத்தில் ஜெய்ஸ்வால் 214* ரன்களுடனும், சர்பராஸ் கான் 68* ரன்களுடனும் கடைசி வரை இருந்தனர். இதனால் இங்கிலாந்து அணிக்கு 557 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்டம் தொடங்கிய முதல் சிறப்பாக அமையவில்லை. காரணம் இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்கமுடியாமல் அடுத்தடுத்து விக்கெட் பறிகொடுத்தனர்.
அதிகபட்சமாக ஜாக் கிராலி 11, பென் ஸ்டோக்ஸ் 15, பென் ஃபோக்ஸ் மற்றும் டாம் ஹார்ட்லீ தலா 16, மார்க் வூட் 33 ரன்களும் மட்டுமே எடுத்தனர். இறுதியாக இங்கிலாந்து அணி 40 ஓவரில் 122 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டையும், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் பும்ரா தலா 1 விக்கெட்டையும் பறித்தனர்.
இரு அணிகளுக்கும் இடையே இதுவரை மூன்று டெஸ்ட் போட்டி நடைபெற்று உள்ளது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்று கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி வருகின்ற 23-ஆம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது.