மீண்டும் தடுமாறிய இந்திய அணி! டி20 ஆட்டத்தை காண்பித்த ரிஷப் பன்ட்!
சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்துள்ளது.
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய நிலையில், தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக இந்திய அணியில் ரிஷப் பண்ட் மட்டும் 40 ரன்கள் எடுத்திருந்தார். ஆஸ்திரேலிய அணி சார்பாக போலந்து 4 விக்கெட்களையும், மிட்சல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், கேப்டன் பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், லயன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
அதனை தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்ரேலியா அணி முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்ததாக, இரண்டாவது நாளில் என்னதான் ஆச்சு என்கிற வகையில், தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்து தடுமாறியது. இறுதியாக இன்று இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி, 51 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அடுத்ததாக தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி அதிலாவது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமா? என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் இன்னிங்ஸை போலவே விக்கெட்டை இழந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (22), கல் ராகுல் (13), சுப்மன் கில் (13), விராட் கோலி (6) என தங்களுடைய விக்கெட்களை இழந்தனர்.
அடுத்ததாக களமிறங்கிய பண்ட் நான் இருக்கிறேன் என்கிற வகையில் டெஸ்ட் போட்டியை டி20 போட்டி போல விளையாடி அவரும் களத்தில் நிலைத்து நிற்கவில்லை. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 33 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து நிதிஷ் குமார் ரெட்டியும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனால் தற்போது இந்திய அணி 32 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்துள்ளது. 2-வது நாள் ஆட்டமும் முடிவுக்கு வந்துள்ளது. களத்தில் ரவீந்திர ஜடேஜா (8) *, வாஷிங்டன் சுந்தர் (6)* ரன்களுடன் உள்ளனர். 2-ஆம் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்ரேலியாவை விட இந்தியா 145 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.