பாகிஸ்தான் அணியை முந்தி புதிய சாதனை படைத்த இந்திய அணி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதன் மூலம் புதிய சாதனை படைத்த இந்திய அணி.
வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 3 வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து, இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று நடந்தது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக அறிமுக வேகப்பந்து வீச்சாளராக அவேஷ்கான் இடம் பிடித்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக ஷாய் ஹோப் 115 ரன்களை விளாசியிருந்தார்.
இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளும், தீபக் ஹூடா, அக்சர் படேல் மற்றும் சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன் பின்னர் 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி பெற 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இரண்டு ரன்கள் ஓடி எடுத்து, கடைசி 2 பந்துகள் மீதம் இருந்த நிலையில் அக்ஷர் பட்டேல் சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற செய்தார்.
அதன்படி, இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 49.4 ஓவரில் 312 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அக்ஷர் பட்டேல் 64*, ஷ்ரேயாஸ் ஐயர் 63, சஞ்சு சாம்சன் 54 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினர். இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற புள்ளி கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியை முந்தி இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதன் மூலம், ஒரு அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 12 தொடர்களை வென்று இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக ஜிம்பாப்வேவுக்கு எதிராக பாகிஸ்தான் 11 போட்டிகளை வென்றதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது இதனை முந்தி இந்தியா சாதனை படைத்துள்ளது.
2007-22 க்கு இடையில் இந்தியா தனது வெற்றிப் பயணத்தை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 12ஆக உயர்த்தியுள்ளது. 1996-21 வரை ஜிம்பாப்வேக்கு எதிராக தொடர்ந்து 11 வெற்றிகளைப் பதிவு செய்த பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ள இந்த வெற்றி உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு அணிக்கு எதிராக தொடர்ந்து ஒருநாள் தொடர் வெற்றிகள்:
- 12 – இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் (2007-2022)*
- 11 – பாகிஸ்தான் vs ஜிம்பாப்வே (1996-2021)
- 10 – பாகிஸ்தான் vs வெஸ்ட் இண்டீஸ் (1999-2022)
- 9 – தென்னாப்பிரிக்கா vs ஜிம்பாப்வே (1995-2018)
- 9 – இந்தியா vs இலங்கை (2007-2021)