இந்திய அணியின் தேர்வுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு ..! காரணம் என்ன?
மும்பை : இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை-27 ம் தேதி முதல் ஆகஸ்ட்-7 தேதி வரை இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் விதமாக இன்று மாலை தேர்வுக்குழு கூட்டமானது நடைபெற இருந்தது.
இந்நிலையில், நடைபெற இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கூட்டமானது நாளை மறுநாள் (ஜூலை-18) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டி போட்டிகளிலிருந்து நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்றுவிட்டனர்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியாவை டி20 அணியின் கேப்டனாக நியமிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சில தகவல்கள் சமீபத்தில் வெளியானது. இதனை தொடர்ந்து நேற்று சூரியகுமார் யாதவ் டி20 இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பர் என மற்றொரு தகவலும் வெளியானது.
இந்நிலையில், இன்று தொடங்கிய இந்த தேர்வுக்குழு கூட்டத்தின் போது இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என தேர்வுக்குழுவின் சில உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
இதனால், ஒரு சிலர் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டின் காரணமாக இன்று நடைபெற இருந்த தேர்வுக்குழு கூட்டமானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.