சீட்டுக்கட்டுபோல சரிந்த இந்திய பேட்ஸ்மேன்கள்! முதல் நாளிலேயே ‘ஆல் அவுட்’
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள அதில் 2-ல் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றது. 3வது போட்டி சமனில் முடிவடைந்தது.
ரோஹித் சர்மா விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சரியாக விளையாடாத காரணத்தால் இந்த போட்டியில் அவருக்கு பதில் சுப்மன் கில் களமிறக்கப்பட்டார். ஆகாஷ் தீப்பிற்கு பதில் பிரசித் கிருஷ்ணா களமிறங்கினார். முதல் டெஸ்ட் போட்டியை தொடர்ந்து பும்ப்ரா இந்த போட்டியில் மீண்டும் கேப்டனாக களமிறங்கினார்.
சிட்னி மைதானத்தில் தொடங்கிய 5வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே சரிவை சந்தித்த இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீட்டுக்கட்டு போல இந்திய பேட்ஸ்மேன்களின் விக்கெட்கள் சரிந்தன.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் முறையே 10 மற்றும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து தங்கள் விக்கெட்களை இழந்தனர். எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் மற்றும் விராட் கோலி இருவரும் ஏமாற்றத்தையே அளித்தனர். அவர்களும் 20 மற்றும் 17 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். பன்ட் 40 ரன்களும், ஜடேஜா 26 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். நிதிஷ்குமார் ரெட்டி முதல் பந்திலேயே விக்கெட் கொடுத்து கோல்டன் டக்அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். கேப்டன் பும்ப்ரா 17 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என மொத்தம் 22 ரன்களை எடுத்தார். பிரசித் கிருஷ்ணா 3 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 72.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்கள் மட்டுமே எடுத்து. ஆஸ்திரேலிய அணி சார்பாக போலந்து 4 விக்கெட்களையும், மிட்சல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், கேப்டன் பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், லயன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி களமிறங்கி 3 ஓவர்கள் விளையாடி 3 ஓவர்களில் 9 ரன்கள் எடுத்துளளது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 2 ரன்கள் மட்டுமே எடுத்து பும்ரா பந்தில் அவுட் ஆகினார். இன்னொரு தொடக்க வீரர் சாம் கான்ஸ்டாஸ் 7 ரன்களுடன் களத்தில் உள்ள நிலையில் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவுற்றது.