“இந்திய வீரர்கள் இங்கு வந்து விளையாடுங்க” அழைப்பு கொடுத்த ஏபி டி வில்லியர்ஸ்!
SA20 கிரிக்கெட் தொடரில் விளையாட இந்த ஆண்டு தினேஷ் கார்த்திக் இங்கு வருவார் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா : SA20 கிரிக்கெட் போட்டி என்பது தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆகும். இந்த போட்டியில் 6 நகரங்கள் கலந்து கொண்டு விளையாடும். மொத்தமாக 34 போட்டிகள் இந்த தொடரில் நடைபெறும். இதில், 114 உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான SA20 தொடர் வரும் ஜனவரி 9 முதல் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு நாட்டிலிருந்தும் கிரிக்கெட் வீரர்கள் லீக்கில் பங்கேற்றாலும், இந்திய கிரிக்கெட் வீரர்களை மற்ற லீக்களில் விளையாட அனுமதிக்கக்கூடாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) விதி அவர்களை லீக்கில் பங்கேற்பதில் இருந்து விலக்கி வைத்துள்ளது ஒரு சோகமான விஷயமாக தான் பார்க்கப்படுகிறது.
இருப்பினும், கடந்த 2024ல் சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்டர் தினேஷ் கார்த்திக் இந்த ஆண்டு நடைபெறவுள்ள இந்த SA20 லீக்கில் பங்கேற்று விளையாடவுள்ளார். இவர் தான் இந்த தொடரில் கலந்து கொண்டு விளையாடும் முதல் இந்திய வீரரும் ஆவார்.
இந்நிலையில், தினேஷ் கார்த்திக் போல மற்ற இந்திய வீரர்களும் இந்த தொடரில் வந்து விளையாடவேண்டும் என தான் விரும்புவதாக தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கிரிக்கெட் ஏபி டி வில்லியர்ஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” இந்த தொடரில் வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதன் காரணத்தால் அவர்கள் வளர முடியும் என நான் நினைக்கிறேன்.
இந்த போட்டியில் விளையாடுவது ஐபிஎல் போட்டியில் விளையாடுவது போல இருக்கும். நான் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல்லைப் பின்பற்றி வருகிறேன். இந்த போட்டியில் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு அணிகள் விளையாடுவது வலுவாகவும் இருப்பதாகத் தெரிகிறது.
அவர்களை போலவே, இந்தியாவில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களும் இங்கு வந்து விளையாடினாள் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். தினேஷ் கார்த்திக் இந்த ஆண்டு ஈடுபடுவார் என்பது எங்களுக்குத் தெரியும். அவருடைய விளையாட்டை பார்க்கவும் நான் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறேன். அவரை போல இன்னும் சில இந்திய வீரர்கள் இந்த போட்டியில் விளையாடினாள் இன்னும் சிறப்பாக இருக்கும்.
(இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) எதிர்காலத்தில் அதிக இந்திய வீரர்களை இந்த போட்டிகளில் விளையாட அனுமதிக்கும் என நான் எதிர்பார்க்கிறேன்” எனவும் ஏபிடி மனம் திறந்து தனது ஆசையை வெளிப்படுத்தினார்.