குஜராத் வெள்ளத்தில் சிக்கிய இந்திய வீராங்கனை! போராடி காப்பற்றிய இந்திய ராணுவம்!
வதோதரா : குஜராத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இந்திய கிரிக்கெட் வீராங்கனையான ராதா யாதவ் வெள்ளம் சூழ்ந்த பகுதியிலிருந்து மீட்கப்பட்டு உள்ளார்.
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட வதோதரா பகுதியில் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதில் 28 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதுவரை 20, 000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளம் சூழ்ந்த பகுதியிலிருந்து மீட்கப்பட்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து, குஜராத் முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று இந்திய ராணுவ வீரர்கள் மீட்புப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வதோதராவில் தங்கி இருக்கும் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ராதா யாதவ் வெள்ளத்தில் சிக்கி இருந்திருக்கிறார். மேலும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்குப் பிரச்சனையும் அவருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் ராதா யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டுச் சென்று உள்ளனர்.
இது குறித்து தனது இன்ஸ்டா சமூக வலைத்தள பக்கத்தில் ராதா யாதவ் நன்றி தெரிவித்துப் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “தாங்கள் மிகவும் கடினமான ஒரு சூழலில் சிக்கிக் கொண்டோம். எங்களைத் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தான் பத்திரமாக மீட்டு வந்தார்கள்”, என பதிவிட்டிருந்தார். மேலும், இந்திய கிரிக்கெட் வீராங்கனையான ராதா யாதவ் வரும் அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி தொடங்க உள்ள டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கனமழை காரணமாகக் குஜராத்தில் ஏற்கனவே வெள்ளம் வடியாமல் இருக்கும் நிலையில் தற்போது மேலும் 5 நாட்கள் கனமழைக்கான ரெட் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால், மீட்புப் பணியில் இருக்கும் அதிகாரிகள் உச்சக்கட்ட எச்சரிக்கையுடன் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர். மேலும், சமூக வலைத்தளங்களில் “Pray for Gujarat” என்ற ஹேஷ்டேக்களை பதிவிட்டு நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.