கோப்பையை வென்ற இந்தியா..ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வா? ரோஹித் சொன்ன பதில்!
நான் ஓய்வு பெறவில்லை என்பதை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை வென்றது. இந்த போட்டி முடிந்த பிறகு அணியின் கேப்டன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வாய்ப்பு இருப்பதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தது.
போட்டி முடிந்த பிறகு ஓய்வு அறிவித்துவிடுவாரோ என ரசிகர்கள் கவலையில் இருந்த நிலையில், போட்டி முடிந்த பிறகு இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம் கேள்வியும் எழுப்பப்பட்டது. அப்போது அதற்கு பதில் அளித்த ரோஹித் சர்மா ” நான் எங்கும் செல்லவில்லை, இங்கே தான் இருக்கிறேன். நான் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என பதில் அளித்துவிட்டு சென்றார்.
முன்னதாக தீயாக அவர் ஓய்வு பெறவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த சூழலில், ரோஹித் சர்மா இப்போது அதற்கு விளக்கம் அளித்துள்ள காரணத்தால் இன்னும் பல மாதங்கள் அவர் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மாவின் இந்த விளக்கம் அவருடைய ரசிகர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் போட்டியில் வெற்றிபெற்ற பிறகு தொடர்ந்து பேசிய ரோஹித் சர்மா ” போட்டியில் வெற்றிபெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒட்டுமொத்தமாக எங்களுடைய அணி கடினமாக உழைத்த காரணத்தால் இந்த வெற்றி எங்களுக்கு கிடைத்துள்ளது. எங்களை ஊக்கவித்த ரசிகர்களுக்கும் இந்த நேரத்தில் நான் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” எனவும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.