3-வது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா, இங்கிலாந்துக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று பகல் இரவு போட்டியாக அகமதாபாத்தில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் இறங்கிய இங்கிலாந்து 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்திய அணியில் அக்சர் படேல் 6, அஸ்வின் 3 விக்கெட்டை வீழ்த்தினார்கள். பின்னர் இறங்கிய இந்திய அணி 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டை இழந்தனர். இதனால் 33 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இங்கிலாந்து அணியில் கேப்டன் ரூட் 5 , ஜாக் லீச் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 30.4 ஓவரில் 81 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால், இந்திய அணிக்கு 49 ரன் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியில் அக்சர் படேல் 5 , அஸ்வின் 4, வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து, தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மான் கில், ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர்.
சிறப்பாக விளையாடிய இருவரும் விக்கெட்டை இழக்காமல் 7.4 ஓவரில் 49 ரன்கள் எடுத்து இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.