முதல் டி20 போட்டியிலேயே இந்திய அணி அபார வெற்றி! ஆட்டநாயகன் ‘அவர்’ இல்லை ‘இவர்’தான்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடனான நேற்றைய டி20 போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது. ஆட்ட நாயகனாக வருண் சக்கரவர்த்தி தேர்வானார்.

கொல்கத்தா : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி நேற்று இரவு 7 மணிக்கு கொல்கத்தா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 132 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 44 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி 68 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
அடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 34 பந்துகளில் 79 ரன்களை விளாசினார். இதில் 5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் அடங்கும். சஞ்சு சாம்சன் 26 ரன்களும், சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகினர். திலக் வர்மா 19 ரன்களுடனும், ஹர்திக் பாண்டியா 3 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.
இறுதியாக 12.5 ஓவர்களில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 133 ரன்களை எடுத்து இந்தியா முதல் டி20 போட்டியில் அபார வெற்றி பெற்றது. இதில் அபாரமாக பேட்டிங் செய்து 34 பந்தில் 79 ரன்கள் எடுத்த அபிஷேக் சர்மா தான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருண் சக்கரவர்த்திக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்கள் வீசியதில், ஹாரி புரூக்-ஐ போல்ட் செய்தும், லிவிங்ஸ்டோன்-ஐ டக்அவுட் செய்தும் , அதிரடியாக விளையாடிய ஜோஸ் படலரை அவுட் செய்தும் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தாததால் வருணுக்கு முதல் டி20 போட்டியில் ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது.