கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர் .! 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
- இன்று இந்தியா ,நியூசிலாந்து இடையே முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.
- இப்போட்டி முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.அதன்படி இன்று முதல் டி20 போட்டியில் ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி நியூசிலாந்து அணி முதலில் தனது பேட்டிங்கை தொடங்கியது.தொடக்க ஆட்டக்காரர்களாக கப்டில் (30), முன்ரோ (59) ரன்கள் அடித்து ஆட்டம் தொடக்கத்திலே அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
பின்னர் இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் , ரோஸ் டெய்லர் இருவரும் அரைசதம் அடித்து இந்திய அணிக்கு இமாலய இலக்கு வைத்தனர். 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் அடித்தனர்.இந்திய அணியில் பூம்ரா ,தாகூர்,சாகல்,துபே ,ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.இதனையடுத்து 204 ரன்கள் அடித்தால் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக ரோஹித் , கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே ரோஹித் சர்மா 7 ரன்னில் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். பின்னர் இறங்கிய கேப்டன் கோலி , கே.எல் ராகுலுடன் கைகோர்த்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.
சிறப்பாக விளையாடிய கே.எல் ராகுல் அரைசதம் அடித்து 56 ரன்கள் குவித்தார்.பின்னர் அடுத்த சில நிமிடங்களில் கேப்டன் கோலி அரைசதம் அடிக்காமல் 45 ரன்னில் வெளியேறினர்.இதைத்தொடர்ந்து இறங்கிய சிவம் துபே சொற்ப ரன்களில் ஆட்டத்தை இழந்தார்.
பின்னர் இக்கட்டான சூழ்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் , மனிஷ் பாண்டே இருவரும் கூட்டணி அமைத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இறுதியாக இந்திய அணி 19-வது ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் அடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.களத்தில் ஐயர் 58*,பாண்டே 14* ரன்களுடன் இருந்தனர்.இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.