யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை: 2வது முறை சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.!
ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பையில் தொடர்ந்து 2வது முறையாக இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தி உள்ளது.
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது, மலேசியாவில் ஜனவரி 18-ம் தேதி முதல் தொடங்கியது.
இந்திய பெண்கள் அணி மேற்கிந்திய தீவுகள் (9 விக்கெட்கள்), மலேசியா (10 விக்கெட்கள்), இலங்கை (60 ரன்கள்), வங்கதேசம் (8 விக்கெட்கள்), ஸ்காட்லாந்து (150 ரன்கள்), இங்கிலாந்து (9 விக்கெட்கள்) ஆகியவற்றை அரையிறுதியில் தோற்கடித்தது. இந்த வெற்றிக்கு பின் இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணியின் ஆட்டம் அபாரமாக இருந்தது.
ஆம், இன்றைய தினம் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணியை எதிர்கொண்டது. இரு அணிகள் மோதும் இந்த போட்டி மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 82 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா 11.2 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 84 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இன்றைய இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி, இந்திய பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 82 ரன்களில் சுருண்டது. இதற்கு இந்திய அணியின் அபார பந்துவீச்சே காரணம். ஸ்காட்லாந்துக்கு எதிராக சதமடித்த த்ரிஷா, இறுதிப் போட்டியிலும் அசத்தினார். 3 விக்கெட்டுகளை சாய்த்ததோடு 44 ரன்களை விளாசினார்.
கடந்த 2023ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த ஷெபாலி வர்மா, இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது. இப்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2025 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட டி20 உலகக் கோப்பையில் நிக்கி பிரசாத் தலைமையில் இந்திய அணி இரண்டாவது முறையாக உலக சாம்பியனாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அசத்திய த்ரிஷா
உலகக்கோப்பையை கைப்பற்றி இந்திய மகளிர் அணி படையில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த கொங்காடி த்ரிஷா நாயகியாக உருவெடுத்து இருக்கிறார். இத்தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய அவர், ஒரு சதத்துடன் 309 ரன்கள் குவித்துள்ளார். அதுமட்டுமல்ல, 4 இன்னிங்ஸில் பந்துவீசிய அவர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். குறிப்பாக இன்றைய இறுதிப்போட்டியில், 8 பவுண்டரிகளுடன் 44 ரன்களுடன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.