மகளிர் ஆசியக்கோப்பை தொடரில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி !!
மகளிருக்கான ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது.
வங்கதேசத்தில் நடந்து வரும் மகளிருக்கான ஆசியக்கோப்பை தொடரில் ஷெபாலி வர்மாவின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் இந்திய அணி, வங்கதேசத்தை வென்றுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஸ்ம்ரிதி மந்தனா 47 ரன்களும், ஷெபாலி வர்மா 55 ரன்களும், மற்றும் ஜெமினா ரோட்ரிக்ஸ் 35 ரன்களும் குவித்தனர். வங்கதேச அணியில் ருமானா அஹ்மது 3விக்கெட்களை சாய்த்தார்.
160 ரன் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியால், இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்களை இழந்து வந்தனர். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் மட்டுமே அடிக்கமுடிந்தது. இதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் ஷெபாலி வர்மா மற்றும் தீப்தி சர்மா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஷெபாலி வர்மா, ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.