#INDvENG: கே.எல். ராகுல்-க்ருணால் பாண்டியா கூட்டணி அதிரடி.. இங்கிலாந்து அணிக்கு 318 ரன்கள் இலக்கு!
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 318 ரன்களை இலக்காக வைத்தது, இந்திய அணி.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட் மற்றும் டி-20 தொடரை கைப்பற்றியது. அதனைதொடர்ந்து மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர், இன்று முதல் 28 ஆம் தேதி வரை புனேவில் நடைபெறவுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா – ஷிகர் தவான் களமிறங்கியுள்ளார்கள். 28 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா வெளியேறியதை தொடர்ந்து, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரையடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களில் வெளியேற, மத்தியில் ஆடிவந்த தவான் சிறப்பாக ஆடி, சதம் விளாசி அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 106 பந்துகளுக்கு 98 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.
அதனைதொடர்ந்து ஹர்திக் பாண்டியா 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேற, கே.எல்.ராகுலுடன் க்ருணால் பாண்டியா இணைந்து அதிரடியாக ஆடிவந்தார். இருவரின் கூட்டணியில் ரன்கள் வேகமாக உயர, 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 98 ரன்களும், கே.எல்.ராகுல் 62 ரன்களும், க்ருணால் பாண்டியா 58 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடினார்கள். இதனைதொடர்ந்து இங்கிலாந்து அணி, 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது.