மகளிர் ஒருநாள் போட்டி: மே.இ.தீவுகளை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
குஜராத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ், இந்திய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. போட்டி குஜராத்தின் வதோதராவில் உள்ள கோடாம்பி கிரிக்கெட் மைதானத்தில் பிற்பகல் 1:30 மணி அளவில் தொடங்கியது.
முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்ய தொடங்கிய இந்திய அணி, 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன்களை குவித்தது.
இதனை தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், 26.2 ஓவரில் 103 ரன்களில் சுருண்டது. இந்திய அணிக்காக ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
குறிப்பாக, இந்த போட்டியின் மூலம், ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். இந்திய அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 91 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்த வருடம் (2024) மொத்தம் 1,602 ரன்களை எடுத்து, அதிக ரன் குவித்த வீராங்கனை என்ற சாதனை படைத்திருக்கிறார்.