இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி..!
இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 99.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 278 ரன்கள் எடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளிடையே 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 40.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 78 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
பின்னர், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 132.2 ஓவரில் 432 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் ஷமி 4 விக்கெட்டையும், சிராஜ், ஜடேஜா மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டை பறித்தனர்.
354 ரன்கள் இங்கிலாந்து முன்னிலையில் இருந்த நிலையில், இந்திய அணி தனது 2-வது இன்னிங்க்ஸை நேற்று தொடங்கி விளையாடியது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித், கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே கே.எல் ராகுல் நிலைத்து நிற்காமல் 8 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்து புஜாரா களம் இறங்க சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஹித் அரை சதம் விளாசி 59 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் இந்திய அணியின் கேப்டன் கோலி களமிறங்க புஜாரா, கோலி இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை சிறப்பாக உயர்த்தினர்.
3-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 80 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 215 ரன்கள் எடுத்து களத்தில் புஜாரா 91*, கோலி 45 ரன்கள் எடுத்து இருந்தனர். இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியதும். சிறிது நேரத்திலேயே சிறப்பாக விளையாடி வந்த புஜாரா 91 ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ரகானே களம் இறங்கினார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் கோலி அரைசதம் அடித்து 55 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து இறங்கிய ரிஷாப் பண்ட் ஒரு ரன்னும் மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
மத்தியில் களமிறங்கிய ஜடேஜா 30 ரன்கள் எடுக்க இறுதியாக இந்திய அணி 99.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 278 ரன்கள் எடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் ஒல்லி ராபின்சன் 5, கிரேக் ஓவர்டன் 3 , மெயின் அலி மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் தலா 1 விக்கெட்டை பறித்தனர். 3போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமமாக உள்ளனர். முதல் போட்டி டிராவில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.