முதல் இன்னிங்சிஸ் முடிவில் இந்திய அணி 95 ரன்கள் முன்னிலை..!
இந்திய அணி 84.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 278 ரன்கள் எடுத்தனர்.
இந்தியா, இங்கிலாந்து இடையில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடியது. நேற்று 2-வது நாள் ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி 2-ஆம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.
அப்போது, இந்திய அணி 46.4 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 125 ரன்கள் எடுத்து இருந்தனர். இந்நிலையில், இன்று 3-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரிஷப் பண்ட் விக்கெட்டை இழந்தார். அடுத்து களம் கண்ட ஜடேஜா கே.எல் ராகுல் உடன் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடி வந்த கே.எல் ராகுல், ஜோஸ் பட்லரிடம் கேட்சை கொடுத்து 84 ரன்னில் பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் ரன் எடுக்காமல் விக்கெட்டை இழக்க பிறகு அடுத்தடுத்து இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். மத்தியில் களமிறங்கிய ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 56 ரன்கள் குவித்தார்.
இறுதியாக இந்திய அணி 84.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 278 ரன்கள் எடுத்தனர். இதனால் இந்திய அணி 95 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இங்கிலாந்து அணியில் ராபின்சன் 5 , ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டை பறித்தனர். இதை தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது.