#INDvNZ: 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 332 ரன்கள் முன்னிலை..!
இந்திய அணி 21 ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்காமல் 332 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது.
இந்தியா – நியூஸிலாந்து இடையே 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி முதலில் இறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 109.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்தனர். 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் சாதனை படைத்தார்.
இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டாம் லாதம், வில் யங் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய 4 ஓவரில் வில் யங் 4 ரன் எடுத்து கோலியிடம் கேட்சை கொடுத்து வெளியேறினார். பின்னர், அதே ஓவரில் கடைசி பந்தில் டாம் லாதம் ஷ்ரேயாஸ் ஐயரிடம் கேட்சை கொடுத்து 10 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் களமிறங்கிய டேரில் மிட்செல் 8, ராஸ் டெய்லர் 1, ஹென்றி நிக்கோல்ஸ் 7 மற்றும் ரச்சின் ரவீந்திரா 4 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். மத்தியில் இறங்கிய ஜேமிசன் மட்டும் அதிகபட்சமாக 17 ரன்கள் எடுக்க இறுதியாக நியூசிலாந்து 28.1 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 62 ரன் எடுத்தனர். இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4, முகமது சிராஜ் 3, அக்சர் படேல் 2, ஜெயண்ட் யாதவ் 1 விக்கெட்டை பறித்தனர். இதனால், 263 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், புஜாரா இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடங்கத்தில் இருந்து இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இவர்கள் கூட்டணியில் 69 ரன்கள் குவித்தனர். இந்நிலையில், 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 21 ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்காமல் 332 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது. களத்தில் மயங்க் அகர்வால் 38*, புஜாரா 29* ரன்களுடன் உள்ளனர்.