இந்தியா – இங்கிலாந்து இதுவரை டி-20 போட்டிகளில்! சிறிய பிளாஷ்பேக்.!
டி-20 உலகக்கோப்பையில் இன்று 2 ஆவது அரையிறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நாக் அவுட் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப்போட்டியில் பாக்கிதான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 ஆவது முறையாக பாக்கிதான் அணி டி-20 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று நடைபெறும் 2 ஆவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி இதுவரை 22 டி-20 போட்டிகளில் எதிர்த்து விளையாடியுள்ளது. இதில் இந்தியா 12 போட்டிகளிலும், இங்கிலாந்து 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இங்கிலாந்திற்கு எதிராக இந்திய அணி விளையாடிய கடைசி 5 டி-20 போட்டிகளில் இந்தியா 4 போட்டிகளில் வென்றுள்ளது.
இங்கிலாந்திற்கு எதிராக டி-20 களில் இந்திய அணி அதிகபட்ச ஸ்கோராக 224/2 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் விராட் கோலி, இங்கிலாந்திற்கு எதிராக டி-20 களில் 19 இன்னிங்சில் விளையாடி 589 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருக்கிறார். இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர் 17 இன்னிங்சில் 395 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், ரோஹித் சர்மா 13 இன்னிங்சில் 383 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கிறார்கள்.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் கிறிஸ் ஜோர்டன் 18 விக்கெட்களுடன் முதலிடமும் இந்தியாவின் சாஹல் 16 விக்கெட்களுடன் இரண்டாவது இடமும், ஹர்டிக் பாண்டியா 14 விக்கெட்களுடன் மூன்றாவது இடமும் வகிக்கின்றனர்.
இந்த போட்டியில் கவனிக்கப்பட வேண்டிய வீரரான இந்தியாவின் விராட் கோலி, இங்கிலாந்திற்கு எதிராக 589 ரன்கள் குவித்து அதிகபட்ச ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலில் இருக்கிறார். மேலும் அடிலெய்டில் நடைபெறும் இந்த போட்டியில் விராட் கோலி, இந்த மைதானத்தில் தனி சாதனை படைத்திருக்கிறார்.
மூன்று விதமான போட்டிகளிலும் சேர்த்து அடிலெய்டில், 14 இன்னிங்சில் விராட் 907 ரன்கள் குவித்திருக்கிறார், இதே மைதானத்தில் டி-20 போட்டிகளில் மட்டும் 2 இன்னிங்சில் விராட் 154 ரன்கள் குவித்திருக்கிறார். இதனால் அடிலெய்டில் விளையாடுவது தனக்கு ரொம்ப பிடிக்கும் என்று விராட் கோலி கூறியிருக்கிறார்.
மற்றொறு வீரரான சூர்யகுமார் யாதவ் இந்த டி-20 உலகக்கோப்பை தொடர் முழுவதும் சிறப்பான இன்னிங்ஸ் ஆடி வருகிறார். சமீபத்தில் ஐசிசி வெளியிட்ட டி-20 பேட்ஸ்மேன் தரவரிசையில் சூர்யகுமார் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்திற்கு எதிராக கடந்த ஜூலை மாதம் நாட்டிங்காமில் நடைபெற்ற டி-20யில் சதமடித்திருந்தார்.
இந்திய அணியின் பௌலிங்கில் அர்ஷ்தீப் சிங், புவனேஸ்வர் குமார், மொஹம்மது ஷமி மற்றும் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியாவும் பந்துவீச்சில் மிரட்டி வருகிறார்.
இங்கிலாந்து அணி, அயர்லாந்திடம் அடைந்த தோல்விக்கு பிறகு கேப்டன் ஜாஸ் பட்லர், தலைமையில் அணி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது. மேலும் கேப்டன் ஜாஸ் பட்லர் திரும்பவும் பழைய அதிரடியில் இறங்கியுள்ளார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் சாம் கர்ரன், பென் ஸ்டோக்ஸ், நல்ல ஃபார்மில் இருக்கின்றனர்.
அடில் ரஷீத், கிறிஸ் வோக்ஸ் அந்த அணியில் பௌலிங்கில் எந்தவித தாக்கத்தையும் இந்த தொடரில் இதுவரை ஏற்படுத்தவில்லை. மேலும் டேவிட் மலான் காயம் காரணமாக நீங்கியுள்ளதால் அவருக்கு பதில் பிலிப் சால்ட்டும், மார்க் வுட் தசைப்பிடிப்பு காரணமாக விளையாடுவதில் சந்தேகம் நீடிப்பதால் அவருக்கு பதில் கிறிஸ் ஜோர்டன் விளையாடுவார்.