INDvNZ : நியூசிலாந்தை சம்பவம் செய்த இந்தியா! நாளை ஆஸ்திரேலியாவுடன் முதல் அரையிறுதி!

நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் குரூப் ஏ பிரிவில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.

INDvNZ - India won by 44 runs

துபாய் : இந்த ஆண்டின் (2025) சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றின் கடைசி போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலே தடுமாறியது என்றே சொல்லலாம்.

முதல் இன்னிங்ஸ் :

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 15, சுப்மன் கில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள். அதன்பிறகு ஷ்ரேயஸ் ஐயர் இறங்கி அதிரடியாக விளையாடிய காரணத்தால் அணிக்கு ஓரளவு கூடுதல் ரன்கள் சேர்ந்தது. அவர் ஆட்டமிழந்த பிறகும் தொடர்ச்சியாக விக்கெட் விழுந்த நிலையில், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி சார்பில் ஷ்ரேயஸ் ஐயர் 79 ரன்களும், ஹர்திக் பாண்டியா 45 ரன்களும், அக்சர் படேல் 42 ரன்களும், கே.எல்.ராகுல் 23 ரன்களும் எடுத்திருந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். அதனை தொடர்ந்து, 50 ஓவர்களில் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.

இரண்டாவது இன்னிங்ஸ் :

இதில் தொடக்க முதலே சீரான இடைவெளியில் நியூசிலாந்து வீரர்களின் விக்கெட்டுகளை இந்திய அணி பந்துவீச்சாளர்கள் பறித்தனர். அதிலும் குறிப்பாக வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சு வேற லெவலில் இருந்தது என்றே சொல்ல வேண்டும். நேற்றைய ஆட்டத்தில்  10 ஓவர்கள் வீசி 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 முக்கிய விக்கெட்டுகளை பறித்தார்.

வில் யங் 22 ரன்கள், ரச்சன் ரவீந்திரா 6 ரன்கள், டேரில் மிட்சல் 17 ரன்கள், டாம் லாதம் 14 ரன்கள், க்ளென் பிலிப்ஸ் 12 ரன்கள், மைக்கேல் பிரேஸ்வெல் 2 ரன்கள் என தொடர்ச்சியாக விக்கெட்கள் விழ கேன் வில்லியம்சன் மட்டும் நிலைத்து ஆடி 81 ரன்கள் எடுத்து 41வது ஓவரில் அக்சர் படேல் பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பிறகு வந்த கேப்டன் மிட்செல் சான்ட்னர் 28 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். அடுத்து வந்த பந்துவீச்சாளர்களும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.

இதனை அடுத்து, நியூசிலாந்து அணி 45.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி தேர்வானார்.

அடுத்த ஆட்டம் :

ஏற்கனவே, இரண்டு அணிகளும் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டது. இருப்பினும் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்க இரண்டு அணியும் முயற்சி செய்து விளையாடிய நிலையில், இந்திய அணி அசத்தல் வெற்றிபெற்று முதலிடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து நாளை நடைபெற உள்ள முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.

2023-ல் இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தது. அதற்கு பழிதீர்க்கும் வகையில் நாளை இந்திய அணி வெற்றி  பெறுமா? அல்லது இந்த தொடரில் மிரட்டலான ஆடி வரும் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்