ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா..!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டி20 போட்டி ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 28 பந்தில் 37 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 8 ரன்னிலும், கேப்டன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
இதைத்தொடர்ந்து, தொடக்க வீரர் ருதுராஜ், ரிங்கு சிங் இருவரும் சற்று நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். இதில் நிதானமாக விளையாடி ருதுராஜ் 32 ரன்களும், ரிங்கு சிங் 46 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா 19 பந்தில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டைகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியா அணியில் பென் துவர்ஷுயிஸ் 3 விக்கெட்டையும், தன்வீர் சங்கா, ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். 175 ரன்கள் இலக்குடன் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் , ஜோஷ் பிலிப் இருவரும் களமிறங்கினர். ஜோஷ் பிலிப் 8 ரன்கள் எடுத்து இருந்தபோது 4 ஓவரில் ரவி பிஷ்னோய் வீசிய பந்தில் போல்ட் ஆனார். மறுபுறம் அதிரடியாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் 16 பந்தில் 1 சிக்ஸர், 5 பவுண்டரி விளாசி 31 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
அடுத்து வந்த பென் மெக்டர்மோட், ஆரோன் ஹார்டி இருவரும் அக்சர் படேல் வீசிய அடுத்தடுத்த ஓவரில் போல்ட் ஆனார்கள். பென் மெக்டர்மோட் 19, ஆரோன் ஹார்டி 8 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். மத்தியில் இறங்கிய மத்தேயு ஷார்ட் 22, டிம் டேவிட் 19 ரன்கள் எடுக்க இறுதியாக ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணியில் அக்சர் படேல் 3 விக்கெட்டையும், தீபக் சாஹர் 2 விக்கெட்டையும் , ரவி பிஷ்னோய், அவேஷ் கான் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இதுவரை நான்கு போட்டிகள் முடிந்துள்ளது. இதில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.