#T20WorldCup: மீண்டும் சொதப்பி 110 ரன்னில் சுருண்ட இந்தியா..!
இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7விக்கெட்டை இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
உலக கோப்பை டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இன்றைய போட்டியில் நியூசிலாந்து, இந்தியா மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினார்.
ஆனால் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இஷன் கிஷன் 4 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ரோஹித் சர்மா முதல் ஆட்டத்தில் டக் அவுட் ஆனதால், இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து குப்டிலிடம் கேட்சை கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
நிதானமாக விளையாடிய கே.எல்.ராகுல் 11 ரன்களுடன் வெளியேற அடுத்து வந்த கேப்டன் கோலி வந்த வேகத்தில் 9 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா, ஜடேஜா இருவரும் சீராக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 23 ரன் எடுத்தார். நிதானமாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா 26* ரன் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.
இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்தனர். நியூஸிலாந்து அணியில் டிரெண்ட் போல்ட் 3 , இஷ் சோதி 2 விக்கெட்டை பறித்தனர்.