இந்தியா அபார வெற்றி- 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது
தென் ஆப்பிரிக்காவை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய அணி.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. நேற்று திருவனந்தபுரத்தில், முதல் டி-20 போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
இதன்படி முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியினர், இந்தியாவின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணியால், 8 விக்கெட்கள் இழப்புக்கு 106 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இந்திய அணியில் அற்புதமாக பந்துவீசியா அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களும், தீபக் சஹர், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர். தென் ஆப்பிரிக்க அணியில் கேசவ் மகாராஜ் மட்டும் சிறப்பாக விளையாடி 41 ரன்களைக் குவித்திருந்தார்.
107 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்திலேயே கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் விக்கெட்களை இழந்திருந்தாலும், கே.எல்.ராகுல் மற்றும் சூரியகுமார் ஆகியோர் சிறப்பாக விளையாடி வெற்றி பெறச் செய்தனர். ராகுல் 51 ரன்களும், சூரியகுமார் 50 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
அர்ஷ்தீப் சிங், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.