IND vs NZ : மைதானத்தில் வெளுத்து வாங்கும் மழை! தாமதமாகும் டாஸ்..! போட்டி எப்போது?
இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் சின்னசாமி மைதானத்தில் தற்போது மழை பெய்து வருகிறது.
பெங்களூரு : நியூஸிலாந்து அணி, இந்தியாவில் 3 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றியப்பயணத் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்படி, இன்று (16-10-2024) பெங்களூரூவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியானது நடைபெற இருந்தது.
இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கவுள்ள இந்த போட்டியானது தற்போது மழை பெய்து வருவதால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், மழைப்பொழிவு காரணமாக டாஸ் கூட போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை மழை நின்றால் அடுத்த 45 நேரம் முதல் 60 நிமிடம் (1 மணி நேரம்) வரையில் மைதானத்தைச் சீராக்கும் பணிகள் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
அதன் பின், போட்டிக்கான டாஸ் போடப்பட்டு போட்டித் தொடங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிகமுக்கியமான போட்டியாகும். அதற்கு காரணம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி தான்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை பொறுத்த வரையில் தர வரிசையில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் அணியே அடுத்த வருடம் நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள். தற்போது, டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி இரண்டாம் இடத்தல் இருந்து வருகிறது. அதே போல நியூஸிலாந்து அணியும் 6-வது இடத்திலிருந்து வருகிறது.
இதனால், இந்த தொடரில் 3 போட்டிகளையும் நியூஸிலாந்து அணி வென்றாலோ அல்லது போட்டி நடைபெறாமல் போனாலோ அது இந்திய அணிக்கு ராக்கிங் பட்டியலில் பின்னடைவாகவே மாறிவிடும். இந்த கணக்கு நியூஸிலாந்து அணிக்கும் சாரும்.
அதனால், இந்த போட்டி நடக்க வேண்டும் என்றே இரு அணிகளும் விரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், வரும் ஞாயிற்றுக்கிழமை வரையில் பெங்களூரூவில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், மழை நின்ற பிறகு போட்டி குறித்த அடுத்தடுத்த முடிவுகள் எடுக்கப்படும் எனக் கருதப்படுகிறது.