IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!
பிட்ச்சை தவறாக கணித்துவிட்டேன், மேலும் நேற்றைய நாள் மோசமானதாக அமைந்தது எனவும் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெறிவித்துள்ளார்.
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில், போட்டியின் 2-ஆம் நாளான நேற்று, இந்த முதல் போட்டியானது தொடங்கப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
இந்த தவறான முடிவால் இந்திய அணி, நேற்று பேட்டிங்கில் தடுமாற்றத்திற்கு உள்ளானது. மேலும், முதல் இன்னிங்ஸ்க்கு 46 ரன்களுக்கு 10 விக்கெட்டையும் இழந்து மோசமான ஒரு சாதனையையும் படைத்தது. குறிப்பாக நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் சொற்ப ரன்களில் அட்டமிழந்து வெளியேறினார்கள்.
பேட்டிங் தான் கைகொடுக்கவில்லை என நினைத்தால், இந்திய அணியின் பந்து வீச்சும் அந்த அளவுக்கு கைகொடுக்கவில்லை. இதனால், நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 180 ரன்கள் எடுத்து 134 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
அதன் பின் நேற்றைய நாள் முடிவில் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா நேற்றைய விளையாடியதைக் குறித்து பேசி இருந்தார். அவர் பேசிய போது, “பிட்சைத் தவறாக கணித்து விட்டேன். 46 ரன்னுக்கு ஆல்-அவுட்டான போது ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன். வருடத்தில் ஏதேனும் ஒரு நாளில் இது போல தவறான முடிவை எடுக்க நேரிடலாம்.
ஆடுகளத்தில் புற்கள் இல்லை என நினைத்தோம். இந்த நாள் மோசமானதாக எங்களுக்கு அமைந்துள்ளது. மந்தமான பிட்சில் தான் குல்தீப் விக்கெட் வீழ்த்துவார். இதனால் தான் ஆகாஷ் தீப்பை அணியில் சேர்க்கவில்லை. அதே போல 3-வது இடத்தில் களமிறங்குவது என்பது கோலியின் முடிவு தான். சர்பராஸ் கான் பொதுவாக நான்கு, ஐந்து அல்லது 6வது விக்கெட்டுக்கு தான் வருவார்.
இதனால், தான் 3வது இடத்தில் களமிறங்க முடியுமா என கோலியிடம் கேட்டோம். அனுபவ வீரர்கள் கூடுதல் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதர்காக கோலியும் துணிச்சலாக பேட்டிங் களமிறங்கினார். தற்போது, 2-வது இன்னிங்ஸில் சிறப்பாக பேட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்”, என ரோஹித் சர்மா பேசி இருந்தார்.