IND vs NZ ODI: மீண்டு வருமா இந்தியா? நியூசிலாந்துக்கு எதிராக நாளை 2வது ஒருநாள் போட்டி.!
இந்தியா-நியூசிலாந்து மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ஹாமில்டனில் நடைபெறுகிறது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் டி-20 தொடரில் மழை குறுக்கிட்டு ஒரு போட்டி ரத்தானாலும், இந்தியா 1-0 என்ற கணக்கில் வென்றது.
ஆக்லாந்தில் நேற்று தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. டாசில் தோற்ற இந்திய அணி, நியூசிலாந்தின் விருப்பத்திற்கேற்ப முதலில் பேட்டிங் செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தவான், சுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரின் அரைசதத்தால் இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்டியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் குவித்தது.
307 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில், கேப்டன் வில்லியம்சன் மற்றும் டாம் லேதமின் சிறப்பான ஆட்டத்தால் 47 ஓவர்களில் இலக்கை அடைந்தது. வில்லியம்சன் மற்றும் டாம் லேதம் 4ஆவது விக்கெட்டுக்கு 221* ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தனர். முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் நாளை ஹாமில்டனில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்தியாவின் பேட்டிங்கைப் பொறுத்தவரை ஷிகர் தவான், சுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் ஆகியோர் மேலும் வலு சேர்க்கின்றனர். கடந்த போட்டியில் அறிமுகமான உம்ரன் மாலிக், முதல் போட்டியிலேயே சிறப்பாக பந்து வீசி கவனத்தை ஈர்த்தார்.
முதல் போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் நியூசிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக 5 ஒருநாள் போட்டிகளில் தோல்வியுற்று மோசமான சாதனையை இந்தியா படைத்திருக்கிறது. நாளைய போட்டியில் தொடரை இழக்காமல் இருக்க இந்தியாவும், தொடரை வெல்ல நியூசிலாந்தும் போராடும் என்பதால் பரபரப்பிற்கு குறைவு இருக்காது என்றே சொல்லலாம்.
பொடியை முன்னிட்டு இந்திய அணி வீரர்கள் ஹாமில்டனுக்கு வந்து சேர்ந்துள்ளனர். ஆட்டம் நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. நியூசிலாந்து வானிலை அறிக்கை அளித்த தகவலின் படி போட்டி நடைபெறும் நாளில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் போட்டி ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
Hello from Hamilton ????????#TeamIndia | #NZvIND pic.twitter.com/AHskNav1Vm
— BCCI (@BCCI) November 26, 2022