IND vs NZ : ஆறுதல் வெற்றியை நோக்கி இந்திய அணி! பும்ராவுக்கு பதில் களமிறங்கும் ஹர்ஷித் ராணா?
இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை : நியூஸிலாந்து அணி இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்றுப் பயணம் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. இந்த தொடரின் 3-வது மட்டும் கடைசி டெஸ்ட் போட்டியானது வரும் நவம்பர்-1 ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது .
இதற்கு முன்னதாக இந்த தொடரில் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்து ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், பல வருடங்கள் நீடித்து வந்த ரெக்கார்டையும் இந்திய அணி கைவிட்டது. அதாவது,12 வருடங்களாகச் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காத இந்தியா அணி இந்த தொடர் தோல்வியின் மூலம் அதையும் இழந்துள்ளது.
இப்படி இருவகையில், கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியாவது இந்திய அணிக்குக் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஏற்கனவே தொடரையும் இழந்த நிலையில், கடைசி போட்டியில் கடந்த 2 போட்டிகளில் வெளியிலிருந்த வீரர்கள் திரும்ப விளையாட வரலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
அதன்படி, வேகப் பந்து வீச்சாளரான பும்ராவிற்கு பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, அடுத்த மாதம் நடைபெறவுள்ள பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரைக் கருத்தில் கொண்டு பும்ராவிற்கு ஓய்வளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த தொடர் இந்தியாவுக்கு மிகமுக்கிய தொடராகப் பார்க்கப்படுவதால், பும்ரா போன்ற முக்கிய வீரருக்கு காயம் ஏற்பட்டால் அது இந்திய அணிக்குப் பின்னடைவாக அமைந்து விடும் என்பதால் ஓய்வளிக்க உள்ளதாகவும், அவருக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குவதாகவும் தெரியவந்துள்ளது. ஒருவேளை ஹர்ஷித் ராணா இந்த போட்டியில் களமிறங்கினாள் அது அவரது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.