IND vs NZ : கோலி முதல் ராகுல் வரை! சாதனைகளைக் குவிக்கக் காத்திருக்கும் இந்திய அணி!
இந்தியாவின் நட்சத்திர வீரரான விராட் கோலிக்கு டெஸ்ட் போட்டிகளில் 9000 ரன்களை எடுப்பதற்கு இன்னும் 53 ரன்கள் தேவைப்படுகிறது.
பெங்களூர் : இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது இன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சின்னசாமி மைதானத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாகப் போட்டி தொடங்குவதில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்திய மண்ணில் மட்டும் இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே மொத்தம் 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. அதில், 17 முறை இந்திய அணி வெற்றிப் பெற்றிருக்கிறது. 2 போட்டிகளை மட்டுமே நியூஸிலாந்து அணி வெற்றிப் பெற்றிருக்கிறது. மேலும், 2 போட்டிகள் டிராவில் முடித்துள்ளன.
இதன்படி, பார்க்கையில் இந்திய அணி தான் டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது எனத் தெரிகிறது. இந்த போட்டி நடைபெற்றால் இந்திய அணியும், இந்திய அணியின் குறிப்பிட்ட ஒரு சில வீரர்களும் பல சாதனைகளைப் படைக்க உள்ளதாகத் தெரியவந்துள்ளது. அது என்னவெல்லாம் என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
விராட் கோலி :
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, இந்த டெஸ்ட் போட்டியில் பேட்டிங் விளையாடி 53 ரன்கள் சேர்த்தார் என்றால் டெஸ்ட் போட்டிகளில் அவர் 9000 ரன்களை தொட்டு விடுவார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்தியர்களின் பட்டியலில் தற்போது 8947 ரன்களுடன் 4-ஆம் இடத்திலிருந்து வருகிறார். ஆனால், கடந்த வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரில் இவர் அந்த அளவிற்கு விளையாடாதது ரசிகர்களுக்கு வருத்தமாகவே இருந்து வருகிறது.
கே.எல்.ராகுல் :
கோலியைப் போலவே மற்றொரு நட்சத்திர வீரரான கே.எல்.ராகுலும் இந்த போட்டியில் விளையாடி 31 ரன்கள் சேர்த்தார் என்றால் டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்களைத் தொட்டுவிடுவார். இவர், கடந்த வங்கதேச அணியுடன் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாகவே விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்வின், ஜடேஜா மற்றும் ஜெய்ஸ்வால் :
ஐசிசி ஆல்ரவுண்டர் தரவரிசையில் நீண்ட காலமாக ரவீந்திர ஜடேஜா, 468 புள்ளிகளுடன் முதலிடத்திலிருந்து வருகிறார். அதே போல, அஸ்வின் கடந்த வங்கதேச டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி இருந்ததால் அவர் அந்த தொடரின் நாயகன் விருதையும் வென்றிருந்தார்.
இதனால், நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த தரவரிசைப் பட்டியலில் அவர் முன்னிலை பெற்று இருக்கிறார். அதன்படி, ஜடேஜாவிற்கு அடுத்தபடியாக 358 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் இருக்கிறார். இதனால், இந்த நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் இருவருக்கும் இடையே முதலிடத்திற்கான போட்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வால், சமீப காலத்தில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளைத் தாண்டி டெஸ்ட் போட்டிகளில் மிகவும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இதனால், அவர் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் 792 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்திலிருந்து வருகிறார்.
அவரது சிறப்பான பேட்டிங்கை இந்த தொடரிலும் தொடர்ந்தார் என்றால் 899 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் ஜோ ரூட்டை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேப்டன் ரோஹித்தும் .. இந்திய அணியும் …!
இந்தியா அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா பல சாதனைகளை ஒரு கேப்டனாக அடுத்தடுத்து நிகழ்த்தி வருகிறார். அதிலும், இந்திய டெஸ்ட் அணியை நம்பர்-2 இடத்திற்கு நகர்த்துவதற்கு ஒரு கேப்டனாக அவரது பங்கு மிக முக்கியமாக அமைந்துள்ளது.
இந்திய அணி, இந்திய மண்ணில் மட்டும் தொடர்ச்சியாக 18 டெஸ்ட் தொடர்களை வெற்றிப் பெற்றுள்ளது. இதனால், ரோஹித் சர்மா இந்திய மண்ணில் 67% சதவீத வெற்றி வாய்ப்பை வைத்துள்ளார். இதன் மூலம் ஒரு அணியின் கேப்டனாக அவரது செயல்திறன் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.