IND vs NZ : நிறைவடைந்த முதல் நாள் ஆட்டம்! ஆதிக்கம் செலுத்துமா இந்தியா?
நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் சிறப்பாக பந்து வீசிய வாஷிங்க்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
புனே : இந்திய-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கப்பட்டது. இதில், முதலில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.அதன்படி, தொடக்கம் முதலே சற்று நிதானத்துடன் விளையாடினாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் இழந்தது நியூஸிலாந்து அணி.
.ஒரு கட்டத்தில், டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திராவின் கூட்டணியில் நியூஸிலாந்து அணி வலுவான ஒரு ஸ்கோரை நோக்கி நகர்ந்தது. இந்த நிலையில், மீண்டும் வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் அஸ்வின் சுழற் பந்து வீச்சில் இருவரும் மாறி மாறி விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின், மிட்செல் சான்ட்னர் சிறுது நேரம் நின்று விளையாடினர். இதன் காரணமாக, நியூஸிலாந்து அணி ஸ்கோர் டீசண்டான ஸ்கோராக அமைந்தது. நியூஸிலாந்து அணியில் அதிகபட்சமாக கான்வே 76 ரன்களும், ரச்சின் 65 ரன்களும் குவித்தனர். மிட்செல் சான்ட்னர் அவரது பங்கிற்கு 33 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில், 79.1 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்த நியூஸிலாந்து அணி 259 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து, முதல் இன்னிங்ஸ்க்கு பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தை தடுமாறி விளையாடியது. இதன் காரணமாக, ரோஹித் சர்மா 0 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். தற்போது, கில் 10 ரன்களும், ஜெய்ஸ்வால் 6 ரன்களும் எடுத்து களத்தில் விளையாடி வருகின்றனர்.
இன்றைய நாள் இரு அணிகள் பக்கமும் சாயாமல் நடுநிலையாகவே இருந்து வருகிறது. இதனால், நாளை நடக்கும் 2-ஆம் நாளில் பேட்டிங்கில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றார். மேலும், இந்த போட்டியின் 2-வது நாள் நாளை காலை 9.30 தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.