IND vs BAN : விக்கெட்டை பறக்க விட்ட பவுலர்கள்! இந்தியாவுக்கு 95 ரன்கள் இலக்கு!
இந்தியா, வங்கதேஷ அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த டெஸ்ட் போட்டியில் 5-வது மற்றும் கடைசி நாள் நடைபெற்று வருகிறது.
கான்பூர் : கடந்த 4 நாட்களாக நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் இன்று காலை தொடங்கப்பட்டது. இந்த போட்டியின் 2-வது மற்றும் 3-வது நாள் மழையின் காரணமாக நடைபெறாமல் போனது. இந்த நிலையில் நேற்று 4-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது.
அதில் வங்கதேச அணியின் விக்கெட்டுகளை மளமளவென எடுத்த இந்திய அணி பேட்டிகளும் மிகத் தீவிரமாக ரன்களை சேர்த்தது. அதிலும், டி20ஐ போல அதிரடி காட்டிய இந்திய அணி வங்கதேச அணியின் பவுலர்களை சமாளித்து அவர்களுக்கு சவாலாக மாறினார்கள்.
அதிலும் கே.எல்.ராகுல், ஜெய்ஷ்வால், விராட் கோலி என டி20 அதிரடி பேட்ஸ்மேன்கள் அனைவரும் டி20 போல விளையாடி ரன்களை விரைவாக சேர்த்தனர். இதனால், இந்திய அணி 285 ரன்கள் எடுத்திருந்தது. இந்த மூலம் வங்கதேச அணியை விட 42 ரன்கள் முன்னிலையில் இருந்தது இந்திய அணி.
அதைத் தொடர்ந்து வங்கதேச அணி கடைசி செக்ஷனில் பேட்டிங் விளையாடியது. அப்போதே போட்டியை டிரா செய்யும் முனைப்புடன் விளையாடிய வங்கதேச அணி நேற்றைய நாளிலே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இப்படி, நேற்றைய நாள் முடிவடைந்த நிலையில் கடைசி நாளான இன்று தொடங்கியது.
இன்றும், இந்த போட்டியை டிரா செய்யும் முனைப்புடன் விளையாடிய வங்கதேச அணி நிதானமாகவே ரன்களை சேர்த்தது. ஆனாலும், இந்திய அணியின் அசுரத்தனமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.
அதிலும் மிகச் சிறப்பாக பந்து வீசிய பும்ரா, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்கள். இதனால், வங்கதேச அணி 47 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்து வெறும் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக இந்திய அணிக்கு 95 ரன்கள் வங்கதேச அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. தற்போது இன்றைய நாளின் முதல் செஷன் முடிவடைந்த நிலையில் உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் போட்டியானது தொடங்கவுள்ளது.