IND vs BAN : ஹர்ஷித் ராணாவுக்கு இடமா? பயிற்சியாளர் கூறுவது என்ன?
வங்கதேச அணியுடன் நடைபெற்று வரும் டி20 தொடரின் 3-வது மட்டும் கடைசி டி20 போட்டியானது இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஹைதராபாத் : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிற டி20 தொடரின் கடைசிப் போட்டியானது இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் இதற்கு முன்பு நடந்த 2 டி20 போட்டிகளிலும் இந்தியா அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றி இருக்கிறது.
இந்தத் தொடரில் இந்தியா அணியில் மாயங்க் யாதவ், நிதிஷ் ரெட்டி போன்ற இளம் வீரர்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றனர். தலைமைப் பயிற்சியாளாரான கவுதம் கம்பீர் இளம் வீரர்களை ஊக்குவிப்பதை இதில் இருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது. முதல் போட்டியில் மாயங்க் யாதவ் அறிமுகமான போதே அடுத்தாக ஹர்ஷித் ராணாவிற்கு எப்போது அணியில் வாய்ப்பு கிடைக்கும் என இந்திய ரசிகர்கள் ஆர்வத்துடன் கேள்வி எழுப்பி வந்தனர்.
மேலும், இந்தத் தொடருக்கு முன் பத்திரிகையாளர் சந்திப்பில் பயிற்சியாளர் கம்பீர் பேசிய போது இந்தத் தொடரில் முடிந்த வரை இளம் வீரர்களை அறிமுகம் செய்வோம் என கூறி இருந்தார். அதேப் போல, ஏற்கனவே இந்தத் தொடரை இந்திய அணி கைப்பற்றி விட்ட நிலையில், இந்தப் போட்டியில் ஹர்ஷித் ராணாவிற்கு இடம் கிடைக்குமா? என்று கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், இந்திய அணியின் துணை பயிற்சியாளரான ரியான் டோஸ்கேட் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசி இருந்தார். அதில், அவரிடம் ஹர்ஷித் ராணா அணியில் இடம்பெறுவாரா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விளக்கமளித்து அவர் பதில் தெரிவித்திருந்தார்.
அவர் பேசிய போது, “தற்போதைய இந்திய அணியை பார்க்கும் போது வலுவான ஒரு அணியாகவே இருந்து வருகிறது. முடிந்த அளவிற்கு புது வீரர்களை நாங்கள் அறிமுகம் செய்ய விரும்பிகிறோம். இருப்பினும், அணியில் ஏற்படும் சமநிலையைக் குறித்தே அது மாறுபடும்.
மேலும், ஜிதேஷ் சர்மா, திலக் வர்மா போன்ற இளம் வீரர்களும் அணியில் உள்ளனர். அவர்களில் யார் சமநிலை ஏற்படுத்திகிறார்களோ அவர்களை விளையாடவைக்க முயற்சி செய்து வருகிறோம். இன்னும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு ஒரு வருடங்களுக்கும் மேல் இருக்கிறது.
அதனால், அணியில் புதுப்புது மாற்றங்கள் நிலவக்கூடும். நாங்களும் புது முயற்சிகளை எடுத்து வருகிறோம். அதே போல, ஹர்ஷித் ராணாவும் திறமைமிக்க ஒரு வீரர் தான். அதனால் சரியான நேரத்தில் அவருக்கும் வாய்ப்பு என்பது கிடைக்கும். மேலும், ஐபிஎல் போன்ற சிறந்த டி20 அனுபவம் அவரிடம் உள்ளது.
அதே போல ஐபிஎல் தொடரில் சிறந்து விளங்கிய பல வீரர்கள் நம் அணியில் உள்ளனர். அனைவருக்கும் தக்க சமயத்தில் வாய்ப்பு என்பது கிடைக்கும்”, என ரியான் டோஸ்கேட் பத்திரிகையாளர்களிடம் கூறி இருந்தார். இவர் பேசியதைப் பார்க்கும் போது இன்று நடைபெறும் போட்டியில் ஹர்ஷித் ராணாவிற்கு வாய்ப்பும் கிடைக்கும் என்றே தெரிகிறது.