IND vs AUS : ஜெய்ஸ்வாலுக்கு பதில் அடுத்த தொடக்க வீரர்! பார்டர்-கவாஸ்கர் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்?
இந்திய அணியின் இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் தற்போது ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் கேப்டனாக இரானி கோப்பைத் தொடரில் விளையாடி வருகிறார்.
சென்னை : இந்த ஆண்டு நவம்பரில் ஆஸ்திரேலிய அணியுடன், இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாட உள்ளது. மேலும், நடந்து முடிந்த வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றி அசத்தியது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக வங்கதேச அணியுடனான 3 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது வரும் அக்-6 தேதி தொடங்கவுள்ளது.
இந்த தொடருக்கான அணியை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. இதில், ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம்பெறாததால் ரசிகர்கள் பிசிசிஐ-யை கேள்வி எழுப்பினார்கள். மேலும், நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை.
இதனால், அவர் நடைபெற்று வரும் இரானி கோப்பை தொடரில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை கேப்டனாக வழிநடத்தி விளையாடி வருகிறார். இப்படி திறமையுள்ள வீரரை அடுத்தடுத்த முக்கிய தொடர்களில் அணியில் இடம்பெற செய்யாதது, ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.
இந்த நிலையில், தற்போது ருதுராஜ் கெய்க்வாட் ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெறும் பார்டர்-கவாஸ்கர் தொடருக்கு 3-வது தொடக்க வீரராக அணியில் இடம்பெறவுள்ளார் என ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, ஏற்கனவே இந்திய அணி டெஸ்ட் ஓப்பனர்கள் என்றால் ஜெய்ஸ்வாலும், கேப்டன் ரோஹித் ஷர்மாவும் தான்.
ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் ஓய்வில்லாமல் நடைபெறுவதால், ஒருவேளை அந்த சமயம் ரோஹித்-ஜெய்ஸ்வால் இருவரில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் அப்போது ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம்பெறுவார் என கூறுகின்றனர். ருதுராஜ் கெய்க்வாட், தனது திறமையை அவர் விளையாட தொடங்கிய ஐபிஎல் தொடரிலிருந்தே ஒவ்வொரு தொடரிலும் காட்டிக்கொண்டே வருகிறார்.
இந்த ஆண்டில் நடைபெற்று முடிந்த டி20 தொடரிலும் இந்திய அணியில் அவர் இடம்பெறாதது பெரும் சர்ச்சையாக மாறியது. அதன்பிறகு, தற்போது நடைபெற்ற வங்கதேச அணியுடனான தொடரிலும் அவர் அணியில் இல்லாததும் சர்ச்சையை கிளப்பியது. இந்த சமயத்தில் இப்படி ஒரு தகவல் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும், நடைபெற போகும் பார்டர் கவாஸ்கர் கோப்பையில் அவர் இந்திய அணியில் பிளெயிங் லெவனில் இடம்பெறுவரா? என்பதனை பொறுத்து இருந்தே பார்க்கவேண்டும்.