இரண்டாம் நாள் ஆட்டம் : 4.1 ஓவர்கள் மட்டுமே தாக்குபிடித்த இந்திய அணி ஆல் அவுட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று அடிலெய்டு மைதானத்தில் தொடங்கியது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.டாஸ் வென்ற நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, மாயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர்.ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இரண்டாவது பந்தில் பிருத்வி ஷா ரன் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத்தொடர்ந்து புஜாரா களம் இறங்கினார்.சிறிது நேரத்திலேயே மயங்க் அகர்வால் 17 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
இதனைத்தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் புஜாரா இருவரும் நிதானமாக விளையாடிய அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர்.சிறப்பாக விளையாடி வந்த புஜாரா அரைசதம் அடிக்காமல் 43 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.நிதானமாக விளையாடிய விராட் கோலி அரைசதம் அடித்து 74 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.இதையடுத்து இறங்கிய ரகானே 47 ரன்களுடனுன் ஆட்டமிழந்தார்.
நேற்றைய நிலவரப்படி இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 89 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 233 ரன்கள் எடுத்தது.களத்தில் விருத்திமான் சஹா 9 ரன்கள்,அஸ்வின் 15 ரன்களுடனும் இருந்தனர்.இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 4.1 ஓவர்களை மட்டுமே தாக்குபிடித்து 11 ரன்கள் அடித்தது.அதாவது 2-ஆம் நாளில் 93.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 244 ரன்கள் மட்டுமே அடித்தது.களத்தில் பும்ரா 4 ரன்களுடன் இருந்தார்.ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்க உள்ளது.