PBKSvsLSG: சிக்ஸர் மழை பொழிந்த லக்னோ..! பஞ்சாப் அணிக்கு இதுவே இலக்கு..!
ஐபிஎல் தொடரின் இன்றைய PBKS vs LSG போட்டியில், முதலில் பேட் செய்த லக்னோ அணி 257/5 ரன்கள் குவித்துள்ளது.
16-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள், மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி, லக்னோ அணியில் முதலில் கேஎல் ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கைல் மேயர்ஸ் அதிரடியாக விளையாடி பவுண்டரிகள், சிக்ஸர்கள் என பறக்கவிட்டு அரைசதம் விளாசிய நிலையில், ராகுல் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, ஆயுஷ் படோனி மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் சிக்ஸர்களை பறக்கவிட்டனர்.
ஒருபுறம் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட படோனி 43 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஸ்டோனிஸ் அரைசதம் அடித்தார். இதன்பின், களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், ஸ்டோனிஸுசன் இணைந்து ரன்களை குவித்தனர். ஆனால், சாம் கரன் வீசிய பந்தில் ஸ்டோனிஸ் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில், நிக்கோலஸ் பூரன் ஆட்டமிழக்க தீபக் ஹூடா மற்றும் பாண்டியா களத்தில் இருந்தனர்.
முடிவில், லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் அடித்து, 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை பஞ்சாப் அணிக்கு நிர்ணயித்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 72 ரன்களும், கைல் மேயர்ஸ் 54 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 45 ரன்களும், ஆயுஷ் படோனி 43 ரன்களும் குவித்துள்ளனர். பஞ்சாப் அணியில் காகிசோ ரபாடா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.