IPL2023 ருசிகரம்.! 10 டீமுக்கும் ‘கப்’ ஜெயிக்க வாய்ப்பிருக்கு ராஜா..! விவரம் இதோ…
இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் 10 அணிகளுக்கும் உள்ள பிளே ஆஃப் வாய்ப்பு பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
இந்தாண்டு ஐபிஎல் போட்டி மிக விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இதில் இந்த வருடம் என்ன சுவாரஸ்யம் என்னவென்றால், 10 அணிகளுக்கும் இன்னும் ஓரிரு போட்டிகளே இருக்கும் நிலையில், அனைத்து அணிகளுக்கும் ஏதேனும் ஒரு வகையில் பிளே ஆப் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்புகள் பற்றி விவரிக்கிறது செய்தி குறிப்பு.
சென்னை சூப்பர் கிங்ஸ் :
நேற்று டெல்லிக்கு எதிரான வெற்றியின் மூலம் சென்னை அணி தங்கள் நிலையை மேலும் வலுப்படுத்தி உள்ளது. இப்போது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்த ஒரே ஒரு வெற்றி மட்டுமே தேவை. 12 போட்டிகளில் இருந்து 15 புள்ளிகளுடன் இருக்கும் நம்ம சென்னைஅடுத்து கொல்கத்தா அணியை வீழ்த்தினால் பிளே ஆஃப் மட்டுமல்ல சாம்பியன் பட்டமும் கிட்டத்தட்ட உறுதி.
குஜராத் டைட்டன்ஸ் :
நடப்பு சாம்பியன் குஜராத் அணி 11 போட்டிகளில் விளையாடி 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இப்போதைக்கு குஜராத் பிளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்து விட்டது என்றே கூறலாம். மீதமுள்ள அனைத்து ஆட்டங்களிலும் தோல்வி கண்டால் கூட நான்காவது இடத்தில் குஜராத் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மும்பை இந்தியன்ஸ் :
ஐந்து முறை சாம்பியன் ஜாம்பவான் மும்பை இந்தியன்ஸ் இந்த சீசனில் மோசமான தொடக்கத்திற்குப் பிறகு வழக்கம் போல வெகுண்டெழுந்து மீண்டு வருகிறது என்றே கூறலாம். கடந்த செவ்வாயன்று பெங்களூரு அணிக்கு எதிரான வெற்றியைத் தொடர்ந்து, அடுத்தடுத்து இரண்டு வெற்றிகள் பெற்றால் பிளேஆஃப் வாய்ப்பு கிடைக்கும் நிலை உள்ளது. மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் அதிக ரன்ரேட் உடன் வெற்றி பெற்றால், டாப் 10இல் முதல் 2 இடங்களை மும்பை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது.
லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் :
பெங்களூருக்கு எதிராக மும்பை வெற்றி பெற்றதன் மூலம், லக்னோவின் பாதை கொஞ்சம் தெளிவாகிவிட்டது. 11 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகளுடன் தற்போது நான்காவது இடத்தில் லக்னோ உள்ளது. லக்னோ பிளே ஆப் தகுதி பெற மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். ஒரு தோல்வி லக்னோவின் வாய்ப்புகளை தகர்த்துவிடும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் :
ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் ராஜஸ்தான் அணியின் அடுத்தடுத்த மூன்று ஆட்டங்கள் கொல்கத்தா, பெங்களூரு, பஞ்சாப்க்கு எதிரானவை எனபதால், மூன்று வெற்றிகளுடன், அவர்கள் பிளே ஆப் தகுதியை நோக்கி வர அதிக வாய்ப்பு இருக்கிறது. 3 போட்டிகளிலும் வென்றால் நான்காவது இடம் பெற்று சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் தகுதி பெரும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :
கொல்கத்தாவுக்கு இழுபறி சீசன். 11 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளுடன் இருக்கும் அவர்கள் இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். ஆனாலும் அதில் அதிக ரன் ரேட் அதிகமாக வைத்து வெற்றி பெறவேண்டும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ :
பெங்களூருவுக்கும் அதே போல மூன்று ஆட்டங்களில் மூன்று வெற்றிகள் தேவை அதிக ரன் ரேட்டில் தேவை. அவர்களும் கொல்கத்தா போல 11 போட்டிகளில் 10 புள்ளிகள் பெற்றுள்ளனர். மீதமுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெறுவதைத் தவிர பெங்களூருவுக்கு வேறு வழியில்லை.
பஞ்சாப் கிங்ஸ் :
பெங்களூரு , கொல்கத்தா போன்றே இருக்கும் மற்றுமொரு அணி பஞ்சாப். மூன்று போட்டிகளில் மூன்று வெற்றிகள் அதுவும் அதிக ரன் ரேட். அப்படி ஜெயித்தால் மட்டுமே பிளேஆஃப் வாய்ப்பு உறுதி. தற்போது 11 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகள் பெற்றுள்ளது. ஒரு தோல்வி பிளே ஆப் கனவை தகர்த்துவிடும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :
10 ஆட்டங்களில் விளையாடி 8 புள்ளிகளுடன் இருக்கிறது. இருக்கும் அணிகளில் குறைவான போட்டிகளில் விளையாடி உள்ள அணி என்பதால் அடுத்து 4 போட்டிகள் மீதமுள்ளது. ஆனால் அந்த 4 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய நிலையில் தான் ஹைதிராபாத் அணி இருக்கிறது.
டெல்லி கேபிட்டல்ஸ் :
கிட்டத்தட்ட சென்னை அணியுடனான தோல்விக்கு பிறகு பிளே ஆஃப்பில் இருந்து வெளியேறிய முதல் அணி என கூறப்பட்டாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்வி, அடுத்தடுத்த போட்டிகளில் அதிக ரன் ரேட் வைத்து வெற்றி என ஏதேனும் அதிசயம் நடந்தால் டேவிட் வார்னரின் டெல்லி அணி பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு கொஞ்சம் இருக்கிறது.