இப்போ ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு கண்டிப்பா விடமாட்டோம்- நிக்கோலஸ் பூரன்
நிக்கோலஸ் பூரன் : கடந்த 2022-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தகுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரிவில் இடம்பெற்றிருந்த அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணியிடம் தோல்வி பெற்று அந்த வருட ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டிஸ் அணி தகுதி பெறவில்லை.
மேலும், 2023-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெறாமல் போனது. இதனால், 2 ஐசிசி தொடர்களை தவறவிட்டு தற்போது ஒரு ஐசிசி தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி கலந்து கொள்கிறது. இந்நிலையில், இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி வீரருமான நிக்கோலஸ் பூரன் ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோவுக்கு (ESPNcricinfo) அளித்த பேட்டியில் பேசி இருந்தார்.
அவர் பேசுகையில், “நாங்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெறாத பொழுது எங்கள் அணியில் இருந்த எல்லோரும் மனதளவில் பெரிய காயம் அடைந்தோம். அதை தொடர்ந்து நானும் கேப்டன் பதவியிலிருந்து விலகினேன். ஆனால் தற்போது இருக்கும் வீரர்களுக்கு என்ன ஆபத்து இருக்கிறது என்பது நன்றாக தெரியும்.
எங்களை இதிலிருந்து வெளிப்படையாக மீட்டுக் கொள்ளவும், எங்கள் ஊரிலும் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் எங்கள் ரசிகர்களை பெருமைப்படுத்தவும், எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது, அதை தவற விட மாட்டோம். மேலும், இந்த தருணத்தில் நாங்கள் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக இருக்கிறோம்.
சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாங்கள் விளையாடிய தொடரில் பெரிய வீரர்கள் சிலர் இல்லாமல் தான் இருந்தனர். ஆனாலும் அந்த தொடரை நாங்கள் 3-0 என்று கைப்பற்றினோம். எங்களுடைய வீரர்கள் சிறப்பாக எதிர்த்து விளையாடுவார்கள், அது தான் எங்களுக்கு தேவையானது” என்று கூறி இருந்தார்.