சாம்பியன்ஸ் டிராபி : சிக்கல் இருந்தால்.. இந்தியா எங்களிடம் பேசட்டும்- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
எங்களைப் பொறுத்தவரை பாகிஸ்தான் கௌரவமும், மதிப்பும் மிக முக்கியம் என மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.
லாகூர் : அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை ஒட்டி பாகிஸ்தானில் 8 அணிகள் பங்கேற்கும் மினி உலகக்கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதால், பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர முடியாது எனவும் எங்களது போட்டிகளை துபாயில் மாற்றி வைக்குமாறும் ஐசிசிக்கு கடிதம் எழுதியாதாக ஒரு தகவல் வெளியானது.
இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பேரிடியாக அமைந்தது, ஏனென்றால் பாகிஸ்தான் வாரியம் இந்த தொடருக்காக பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளது, இனியும் செலவு செய்யவுள்ளது. இந்நிலையில், இந்திய அணி பாகிஸ்தானில் வரமுடியாது என கூறினால் அது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அது பெரும் நஷ்டமாகும்.
இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான மொஹ்சின் நக்வி திட்டமிட்டபடி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடக்கும் எனவும் இந்திய அணிக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களிடம் பேச வேண்டும் எனவும் கூறியிருக்கிறார். நேற்று லாஹூரில் நிருபர்கள் முன்னில் அவர் இது குறித்து பேசுகையில், “பாகிஸ்தானுக்கு வந்து விளையாடமாட்டோம் என்று இந்தியா மறுத்தது தொடர்பாக சில விளக்கங்களை கேட்டு ஐசிசிக்கு கடிதம் எழுதி உள்ளோம்.
அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம். விளையாட்டையும், அரசியலையும் தனித்தனியாக பார்க்க வேண்டும். எந்த நாடும் அவற்றை ஒன்றாக கலக்கக்கூடாது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் விஷயத்தில் எல்லாமே சரியாக நடக்கும் என்று நம்புகிறேன். எங்களை பொறுத்தவரை பாகிஸ்தானின் கவுரவமும், மதிப்பும் மிகவும் முக்கியம்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும். அவற்றில் ஒரு பகுதி ஆட்டங்களை வேறு நாட்டில் நடத்தும் யோசனையை ஏற்றுக்கொள்ளமாட்டோம். இந்த போட்டிக்கு தகுதி பெற்ற மற்ற அணிகள் அனைத்தும் பாகிஸ்தானுக்கு வர தயாராக உள்ளன. அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
எனவே இந்திய அணிக்கு இங்கு வந்து விளையாடுவதில் ஏதாவது சிக்கல் இருந்தால், அவர்கள் எங்களிடம் பேசட்டும். அவர்களின் கவலையை எங்களால் எளிதில் தீர்க்க முடியும். அவர்கள் இங்கு வராததற்கு எந்த காரணமும் இருப்பதாக தெரியவில்லை.
எனவே போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற மாட்டோம் என்ற எங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூடிய சீக்கிரம் போட்டி அட்டவணையை வெளியிடும் என நம்புகிறோம்”, என மொஹ்சின் நக்வி பேசி இருக்கிறார்.