ஆசியக்கோப்பை ரத்தானால், 5 நாடுகள் கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐ ஆர்வம்.!
ஆசியக்கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் நிலையில், இந்தியா பங்கேற்காது என்பதால் பிசிசிஐ 5 நாடுகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்.
பிசிசிஐ 5 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசியக்கோப்பை 2023 தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா விளையாடும் போட்டியை வேறு பொதுவான நாடுகளில் உள்ள மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் வாரியம் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக ஒட்டுமொத்த ஆசியக்கோப்பை தொடரும் பாகிஸ்தானை விட்டு வேறு நாட்டிற்கு மாற்றப்படும் எனக்கூறப்பட்ட நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, இத்தகைய ஆலோசனையை முன்வைத்தது. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தன் முடிவில், உறுதியாக இருப்பதால் ஆசியக்கோப்பை தொடர் ரத்து செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை ஆசியக்கோப்பை தொடர் ரத்து செய்யப்பட்டால் இந்திய கிரிக்கெட் வாரியம், 5 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.