விராட் கோலியின் இடத்தில் நான் இருந்திருந்தால் இந்த முடிவை எடுத்திருப்பேன்-சோயப் அக்தர்
2022 டி-20 உலகக் கோப்பைக்குப் பிறகு விராட் கோலி ஓய்வு பெறலாம் என்று கூறுகிறார் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர்.
கடந்த சில தினங்களுக்கு முன் ஷாஹீத் அப்ரிடி கோலியின் ஓய்வு குறித்து பேசினார், தற்போது சோயப் அக்தரும் கோலியின் ஓய்வு பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.. அக்டோபர் 16 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கவிருக்கும் டி-20 உலகக்கோப்பை போட்டிக்குப்பின் விராட் கோலி டி-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறலாம் என்று சோயப் அக்தர் கூறியள்ளார் .
விராட் கோலி , தற்பொழுது மூன்று விதமான போட்டிகளிலும்(ஒருநாள் போட்டி , டி-20 மற்றும் டெஸ்ட்) 100க்கும் அதிகமான போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி உள்ளார். மேலும் அவர் 104 டி-20 களில் விளையாடி 51.94 சராசரியாக பேட்டிங் செய்து மொத்தம் 3584 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் முடிவடைந்த ஆசியக்கோப்பை டி-20 போட்டியில் விராட் கோலி 276 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்தவர்களில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்தார் (ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்களும் அடங்கும்). மேலும் கடினமான தனது 2 ஆண்டுகளுக்குப் பின் 71ஆவது சதத்தையும் பூர்த்தி செய்தார்.
இந்த நிலையில் விராட் கோலி மற்ற வடிவ போட்டிகளில் கவனம் செலுத்த, அவர் டி-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறலாம் என்று சோயப் அக்தர் கூறியுள்ளார். மேலும் தான் கோலியின் இடத்தில் இருந்திருந்தால் இந்த முடிவை எடுத்திருப்பேன் என்றும் சோயப் அக்தர் கூறியுள்ளார்.