“அவர் களத்துல இருந்தா ஆபத்து தான்.. அவருக்குனு திட்டம் வச்சிருக்கோம்” – அந்த வீரரைக் குறித்து பேசிய பேட் கம்மின்ஸ்!
பார்டர் கவாஸ்கர் தொடரில் ரிஷப் பண்டின் விக்கெட்டை விரைவில் வீழ்த்த முயற்சி செய்வோம் என பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை : வரும் நவம்பர்-22ம் தேதி இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரை விளையாடவுள்ளது. இந்த தொடரில் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த 5 டெஸ்ட் போட்டிகளும் இரு அணிகளுக்கும் மிக மிக முக்கியமான போட்டிகளாகும்.
ஏற்கனவே, நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரின் தோல்வி இந்திய அணியைப் பெரிதும் பாதித்துள்ளது. இந்திய அணி அடுத்த வருடம் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாட வேண்டும் என்றால் ஆஸ்திரேலியா அணியுடன் நடைபெற இருக்கும் 5 டெஸ்ட் போட்டிகளில் 4 போட்டிகளையாவது வெற்றி பெற வேண்டும்.
இந்த இலக்கை குறி வைத்தே தற்போது இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் கால்பதிக்கவுள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் குறித்துப் பேசி இருக்கிறார்.
டெஸ்ட் வரலாற்றில் ரிஷப் பண்ட் என்றாலே ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு தனி பயம் என்றே கூறவேண்டும். அந்த அளவிற்கு அவர் அங்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இதனால், அவரது விளையாட்டைக் களத்தில் தடுப்பதற்கு புதிய திட்டங்கள் வைத்துள்ளோம் என பேட் கம்மின்ஸ் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
தனியார் பத்திரிகைக்கு ஒரு சிறிய பேட்டி அளித்த பேட் கம்மின்ஸ், பல கேள்விகளைக் குறித்துப் பதிலளித்துள்ளார். அப்போது அதில் ரிஷப் பண்ட்டை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறீர்களா என்ற கேள்வி பேட் கம்மின்ஸ் பதிலளித்தார். இது குறித்துப் பேசிய அவர், “ரிஷப் பண்ட் போட்டியில் வேகமான மாற்றத்தை ஏற்படுத்துபவர்.
ஆஸ்திரேலியாவில் அவர் இறுதியாக விளையாடிய போதும் அது அவருக்கு நல்ல தொடராகவே அமைந்தது. அவர் களத்தில் இருப்பது எங்கள் அணிக்கு ஆபத்தானது என்று எங்களுக்குத் தெரியும். எனவே பார்டர் கவாஸ்கர் தொடரில் அவரின் விக்கெட்டை விரைவில் வீழ்த்த நாங்கள் முயற்சி செய்வோம். மேலும், அவருக்காக எங்களிடம் சில நல்ல புதிய திட்டங்களை வகுத்துள்ளோம்”, என பேட் கம்மின்ஸ் பேசி இருந்தார்.