“அணிக்கு எந்த உதவியும் செய்யல…கில் தமிழக வீரர்னா அப்பவே தூக்கியிருப்பாங்க” – பத்ரிநாத்
என்னுடைய விளையாட்டு இது தான் நான் இப்படி தான் அடிப்பேன் என்று விளையாடுவதற்கு பெயர் கிரிக்கெட் இல்லை என சுப்மன் கில் ஆட்டத்தை சுப்பிரமணியம் பத்ரிநாத் விமர்சித்து பேசியுள்ளார்.
சென்னை : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது பெரிய தீராத ஒரு வருத்தமாக இருந்து வருகிறது. இந்த தொடரில் தோல்வி அடைந்த காரணத்தால் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்துள்ளது. தொடரில் தோல்வி அடைய முக்கிய காரணமே, பும்ரா, ஜெய்ஷ்வால் போன்ற வீரர்களை தவிர வேறு எந்த வீரரும் சிறப்பாக விளையாடாதது தான்.
இந்த தொடரில் கில் 2, 3, 5 ஆகிய மூன்று போட்டிகளில் விளையாடினார். இருப்பினும், பெரிதாக அணிக்கு உதவிய படி எதாவது போட்டியில் நிலைத்து நின்று ஆடினார் என்றால் நிச்சயமாக இல்லை என பலரும் விமர்சித்து வருகிறார்கள். மொத்தமாக இந்த தொடரில் 93 ரன்கள் மட்டும் தான் அவர் எடுத்திருந்தார். எனவே, அவருடைய பார்மும் மோசமாக இருக்கும் நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் அவரை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுப்பிரமணியம் பத்ரிநாத் ” சுப்மன் கில் ஆட்டம் எனக்கு மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது. ஒரு வீரராக அவர் இந்திய அணிக்கு பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் எந்த உதவியும் செய்யவில்லை. அவருடைய விளையாட்டை திரும்பி பார்ப்பதற்கு எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. ரன்அடிக்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை. பின்னாடி வரும் வீரர்களுக்காவது உதவி செய்யும்படி நிதானமாக களத்தில் நிற்கவேண்டும்.
ரன்அடிக்கவில்லை என்று மனதை குழப்பாமல் 50 பந்து 100 பந்து விளையாடி பந்தை பழைய பந்தாக மாற்றலாம். அப்படி நிதானமாக களத்தில் நின்றாள் எதிரணி பந்துவீச்சாளர்கள் சோர்வாகி விடுவார்கள். அது தான் ஒரு அணிக்கு நீங்கள் செய்து கொடுக்கவேண்டிய ஒரு உதவி. அதனைவிட்டுவிட்டு என்னுடைய விளையாட்டு இது தான் நான் இப்படி தான் அடிப்பேன் என்று விளையாடுவதற்கு பெயர் கிரிக்கெட் இல்லை.
நிதானமாக விளையாடி களத்தில் நின்று அவுட் ஆனால் கூட பிரச்சனை இல்லை.ஆனால், கில் அந்த தொடரில் அப்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. சுப்மன் கில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரராக இருந்தால் எப்பவோ அணியிலிருந்து வெளியேற்றி இருப்பார்கள்” எனவும் ஆதங்கத்துடன் சுப்பிரமணியம் பத்ரிநாத் பேசியுள்ளார்.