#ICCWT20WC2023: அயர்லாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி வெற்றி.!
ஐசிசி மகளிர் டி-20 உலகக்கோப்பையில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் மகளிருக்கான ஐசிசி டி-20 உலகக்கோப்பையில் நேற்று B- பிரிவைச்சேர்ந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் கேப் டவுனில் மோதின. இதில் டாஸ் வென்று அயர்லாந்து அணி முதலில் பேட் செய்தது. இதன்படி அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 137/9 ரன்கள் குவித்தது.
தொடக்கத்தில் களமிறங்கிய ஆமி ஹண்டர் 1 ரன்னில் ஆட்டமிழந்தாலும், அதன் பின் இறங்கிய ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட்(61 ரன்கள்) மற்றும் மற்றொரு தொடக்க வீராங்கனை கேபி லூயிஸ் (38 ரன்கள்) எடுத்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். மற்ற வீராங்கனைகள் பெரிதாக ஸ்கோர் எதுவும் அடிக்கவில்லை, ஒற்றை இழக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
138 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்கள் மட்டும் இழந்து ஒரு பந்து மீதமிருக்கையில் ஆட்டத்தின் இறுதி வரை சென்று வெற்றி இலக்கை அடைந்தது. அந்த அணியில் கேப்டன் ஹேலி மேத்யூஸ் (66 ரன்கள்) எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.