ICCWT20WC: அரையிறுதிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா; வங்கதேசத்துக்கு எதிராக அபார வெற்றி.!
ஐசிசி மகளிர் டி-20 உலகக்கோப்பையில் வங்கதேசத்தை வீழ்த்தி தென்னாபிரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் மகளிருக்கான டி-20 உலகக்கோப்பை தொடரில், குரூப்-A வில் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகள் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
20 ஓவர்களில் அந்த அணியால் 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. அதிக பட்சமாக கேப்டன் நிகர் சுல்தானா(30 ரன்கள்) மற்றும் சோபானா மோஸ்டரி (27 ரன்கள்) எடுத்தனர். பின்னர் 114 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 18 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடக்க வீராங்கனைகள் லாரா வோல்வார்ட்நாட்(66 ரன்கள்) மற்றும் டாஸ்மின் பிரிட்ஸ் (50 ரன்கள்) இருவரும் அரைசதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர். இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி 4 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்தை பின்னுக்கு தள்ளி அரையிறுதிக்கு முன்னேறியது. ஆட்டநாயகியாக லாரா வோல்வார்ட்நாட் தேர்வு செய்யப்பட்டார்.