ஐசிசி உலகக்கோப்பை: சேப்பாக்கத்தில் இந்தியா-பாக். போட்டி?..
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி, இந்தியாவுடன் மோதும் போட்டி சேப்பாக்கத்தில் நடைபெறுவதாக தகவல்.
சேப்பாக்கதில் மோதல்: இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே பரபரப்பு மற்றும் ஆரவாரத்திற்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளை, சென்னையின் சேப்பாக்கம் மற்றும் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பை சாம்பியன்: ஐசிசியின் உலகக்கோப்பை தொடர் என்பது நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கிரிக்கெட் தொடராகும், இந்தமுறை இந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடந்தமுறை 2019இல் நடந்த உலகக்கோப்பை தொடரில், இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
கோரிக்கை: ஏற்கனவே பாகிஸ்தான் அணி, இந்தியாவில நடக்கும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்கு பதிலாக இரு அணிகளுக்கும் பொதுவான வேறு இடங்களில் போட்டியை நடத்த கோரிக்கை விடுத்திருந்தது. மேலும் இந்தியாவில், பாகிஸ்தான் அணி பங்கேற்பது குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
மாறாக வங்கதேசம் அல்லது இலங்கையில் இந்தியா- பாகிஸ்தான் போட்டியை நடத்தவேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் அணி, இந்தியாவில் விளையாட சம்மதித்தால் போட்டியை சென்னையின் சேப்பாக்கத்தில் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.