ஐசிசி உலகக் கோப்பை 2023: இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்காக வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கம்!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நேற்று முதல் இந்தியாவில் தொடங்கியது. நேற்று, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் உலகக்கோப்பை தொடர் தொடங்கியது. அப்போட்டியில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இன்றைக்கு இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் அக். 14ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஹை-வோல்டேஜ் போட்டி நடைபெற உள்ளதால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு இரு நாடுகள் மட்டுமில்லாமல் உலக ரசிகர்களும் எதிர்பார்த்து இருப்பதால், அன்றைக்கு ஸ்டேடியம் நிரம்பி வழியும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
இதனால் போட்டியை காண்பதற்காக ரசிகர்கள் விமானம், தங்கும் விடுதிகளை புக் செய்து வருகின்றனர். இதனால் கட்டணங்களும் அதிகமாக காணப்படுகிறது. இந்த சமயத்தில், இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு இந்திய இரயில்வே ஆமதாபாத்திற்கு சிறப்பு வந்தே பாரத் ரயில்களை இயக்க உள்ளது. இது ரசிகர்களுக்கு உதவும் வகையில் அவர்களது பயணத்தை எளிதாக்குகிறது. அதன்படி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு நெருக்கமான தொலைவில் உள்ள சபர்மதி மற்றும் அகமதாபாத்தில் நிறுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு ரயில் அகமதாபாத்தை அடையும் வகையில் திட்டமிடல் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் போட்டி முடிந்ததும் பயணிகள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,
விலையுயர்ந்த பயணம், பற்றாக்குறை மற்றும் விலையுயர்ந்த தங்கும் வசதி உள்ளிட்ட சிக்கல்களை தீர்க்க வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் உலகக் கோப்பையில் 7 முறை சந்தித்துள்ளது. இந்த 7 முறையில், டி20 உலகக் கோப்பைகளில் வெற்றிகளை உள்ளடக்கிய ஒரு தொடராக இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், 2021 இல், இந்த தொடர் முடிவுக்கு வந்தது. இந்தியா 2022 ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியுடன், தங்கள் பரம எதிரிகள் மீது தங்கள் ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்திய நிலையில், அக்.14ம் தேதி மீண்டும் மோதவுள்ளது.